×

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்

திருப்பூர், நவ. 3: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு விரைந்து அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (ஏ.இ.பி.சி.) தலைவர் சக்திவேல், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை செயலாளர் சஞ்சீவ் ராஜனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்குக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் முதல் பின்னலாடை வர்த்தகம் தொடங்கியுள்ளது. தொழில்துறையை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது பின்னலாடைகள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக கப்பல் மூலமாக பின்னலாடைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. துறைமுகத்தில் பெரிய சரக்கு கப்பல்களுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கான சிறிய கப்பல்கள் போதிய அளவில் இயக்கப்படுவதில்லை. சிறிய கப்பல்கள் குறைவாக இருப்பதால் துறைமுகத்திலிருந்து பெரிய கப்பல்களுக்கு பின்னலாடைகளை கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. ேமலும், துறைமுகத்தில் போதுமான சரக்கு பெட்டகம் இல்லை.

இதன் காரணமாக துறைமுகத்தில் சரக்குகள் ஒரு வராத்திற்கு மேலாக தேங்குகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வெளிநாடுகளுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க முடியாததால், புதிய ஆர்டர்களை பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தாமதமாக ஆடைகளை அனுப்பி வைப்பதால் இருப்பு வைக்கும் பின்னலாடைகளுக்காக துறைமுகத்திற்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் பின்னலாடை தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தூத்துக்குடி துறைமுகத்தில் போதுமான சரக்கு பெட்டகங்கள் வசதியும், சிறிய கப்பல்களை கூடுதல் அளவில் இயக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பின்னர், ஆடைகளை உரிய நேரத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags : port ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...