×

பொதுமக்கள் வலியுறுத்தல் பணி நியமனத்திற்கான வயது வரம்பை குறைத்ததை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

நாகை,அக்.29: ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை 40 ஆக குறைத்த தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் காந்தி வரவேற்றார். மாவட்ட துணை பொறுப்பாளர் சத்தியசீலன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் புவனேஸ்வரி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அண்ணா ஆட்சி காலம் முதல் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை ரத்து செய்து பிறப்பித்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். உயர்கல்வி பயில முன்அனுமதி வேண்டி உரிய முறையில் விண்ணப்பித்தும் கல்வித்துறை அலுவலர்கள் உரிய காலத்தில் முன் அனுமதி வழங்கப்படாத நிலையில் உயர்கல்வி பயின்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பின்னேற்பு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் கல்வித்துறையில் 5 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணையை உடனே வழங்கவேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு உள்ளிட்ட ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை 40 ஆக குறைத்து அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் சித்ரா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன், புள்ளியியல் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அந்துவன்சேரல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

Tags : protests ,Tamil Nadu Primary School Teachers' Coalition ,
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...