×

கிசான் நிதியை போலியாக பெற்றவர்கள் அக்.31க்குள் பணத்தை திரும்ப ஒப்படைக்க கடைசி கெடு

மதுரை, அக். 28: பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு, தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஏப். 1ம் தேதிக்கு பிறகு 16,474 பேர் இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12,919 பேர் தகுதியற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் முதல் தவணையும், சிலருக்கு 2வது தவணையும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன் கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளை சேர்ந்த கணினி மைய பணியாளர்கள், இடைத்தரகர்கள் என 12க்கும் மேற்பட்டோர் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்த விஸ்வநாதன், வேளாண் அலுவலக தொழில்நுட்ப உதவியாளர் சாக்ரடீஸ் பாண்டி ஆகிய 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து பலரை தேடி வருகின்றனர்.

இத்திட்டத்தில், மாவட்டத்தில், 12,919 தகுதியற்ற நபர்கள் முறைகேடாக பணம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டு, நேற்று வரை, 7,413 நபர்களிடம் இருந்து ரூ.2.71 கோடி பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 5,506 நபர்களிடம் இருந்து பணம் திரும்ப பெறுவதற்கு வேளாண்மை துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்திட்டம் குறித்து மதுரை கலெக்டர் தினந்தோறும் ஆய்வு செய்து, முழுமையாக பணத்தை பெற வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வினய் விடுத்துள்ள அறிக்கையில், ‘இத்திட்டத்தில் இதுவரை திரும்ப பணம் செலுத்தாதவர்களிடம் வங்கிகளின் உதவியோடு பணம் பெறும் முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை பணம் செலுத்தாதவர்கள் உடனடியாக வரும் அக்.31ம் தேதிக்குள் பணத்தை திரும்ப செலுத்திட வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்கள் இதுவரை பெற்ற அரசின் அனைத்து சலுகையும் ரத்து செய்யப்படும். மேலும் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Kisan ,
× RELATED விவசாயிகளின் எந்த எதிர்பார்ப்பையும்...