×

நீலகிரியில் 20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஊட்டி, அக். 21: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடுக்கும் வகையில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பதை தவிர்க்க வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒட்டுமொத்த கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கள ஆய்வு மண்டல அளவிலான அலுவலர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக, ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தாசில்தார், துணை கலெக்டர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில், தடை செய்யப்பட்ட 20.90 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.48 ஆயிரத்து 470 அபராதமும் விதிக்கப்பட்டது.  கலெக்டர் இ்ன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘‘வரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Nilgiris ,
× RELATED பிளாஸ்டிக் பை பறிமுதல்