×

பட்டா, சாதி சான்றிதழ் கோரி இருளர் மக்கள் போராட்டம்: ஆவடி தாலுகா அலுவலகத்தில் பரப்பரப்பு

ஆவடி: ஆவடி அருகே நெமிலிச்சேரி, பாரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பல வருடங்களாக வீட்டு மனைப்பட்டா, சாதி சான்றிதழ் வழங்காமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் பலனில்லை. இந்நிலையில், நேற்று காலை 10.30மணி அளவில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் 100க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் ஆவடி தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர், அலுவலகத்தை முற்றுகையிட்டு வீட்டு மனைப்பட்டா, சாதி சான்றிதழ் கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் இருளர் இன மக்கள் தாசில்தார் வந்து எங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தால் தான் கலைந்து செல்வோம் என திட்டவட்டமாக கூறினர். சம்பவ இடத்திற்கு தாசில்தார் சங்கிலிரதி தலைமையில் அதிகாரிகள் வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் இன்னும் ஒருமாதத்தில் குடிமனைப்பட்டா, சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : taluka office ,Patta ,Avadi ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி