×

அடிக்கடி நடைபெறும் வழிப்பறிகளால் கொந்தளிப்பு உயிர், உடமைக்கு பாதுகாப்பு கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், செப்.30 : டாஸ்மாக் பணியாளர்களின் உயிர், உடமைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழக தொழிலாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசுக்கு பெருவாரியான வருவாய் ஈட்டித்தரும் நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சமூக விரோதிகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. உயிர் பாதுகாப்பு, உடமைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. சமூக விரோதிகள் பணம் கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 26.9.2020 அன்று கல்குளம் தாலுகா சித்திரங்கோடு பகுதி சாண்டம் என்ற இடத்தில் உள்ள கடையின் மேற்பார்வையாளர் இரவு பணி முடிந்து வீடு செல்லும் வழியில் மிளகு பொடி தூவி  அவரது கை பையை பிடுங்கி சென்றுவிட்டார்கள்.

மாவட்டத்தில் குறிப்பாக சாண்டம், மருங்கூர், குமாரபுரம், கன்னியாகுமரி, அழகப்பபுரம், சந்தவிளை, செண்பகராமன்புதூர், தக்கலை ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழிப்பறி, கொள்ளை, அரிவாள் வெட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே  பணியாளர்கள், குடும்பங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  டாஸ்மாக் கடைகள் உள்ள பகுதிகளுக்கு இரவு 7 மணி முதல் 9 மணி வரை போலீசார் ரோந்து வர  வலியுறுத்தி தமிழ்நாடு மாநில வாணிப கழக (டாஸ்மாக்) தொழிலாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

 தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் மால்சன் ஜினின், தலைவர் ஜோதி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் நடேசன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் மில்டன், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்க தலைவர் சஜித்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

Tags : Demonstration ,Tasmac ,raids ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்