×

பஜார் பகுதிக்கு மீண்டும் காய்கறி மார்க்கெட் மாற்றம் கூட்ட நெரிசலால் கொரோனா பரவும் அபாயம்

விருதுநகர், செப். 30: விருதுநகரில் காய்கறி மார்க்கெட்டை பஜார் பகுதிக்கு வியாபாரிகள் தாங்களாகவே மீண்டும் மாற்றிக் கொண்டதால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள் பல்வேறு இடங்களில் பிரித்து அமைக்கப்பட்டன. இதன்படி, விருதுநகரில் மெயின்பஜாரில் செயல்பட்ட காய்கறி மார்க்கெட் புதிய பஸ்நிலையம், உழவர் சந்தை, அல்லம்பட்டி முக்குரோடு, மின்வாரிய மைதானம், கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மைதானங்களுக்கு பிரித்து மாற்றப்பட்டது. புதிய பஸ் நிலைய மார்க்கெட்டில் மொத்த, சில்லறை வியாபாரம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14,500ஐ நெருங்கியுள்ளது. 292 பேர் உயிரிழந்த நிலையில், 14 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 200 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.  சமூக இடைவெளி, மாஸ்க் அணிவதால் குறைந்திருந்தாலும், மழைக்காலமான அக்., நவம்பர் மாதங்களில் கொரோனா பரவல் வேகம் காட்டுமோ என்ற அச்சம் நிலவுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வியாபாரிகள் மீண்டும் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில், விருதுநகர் புதிய பஸ்நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட்டை மீண்டும் மெயின் பஜாருக்கு வணிகர்கள் தாங்களாவே இடம் மாறி கொண்டதால், அங்கு இடநெரிசல் மீண்டும் உருவாகி உள்ளது. குறுகிய இடமான அந்த இடத்தில் மீண்டும் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியிடம் கேட்டபோது, ‘புதிய பஸ்நிலையத்தில் இயங்கிய காய்கறி மார்க்கெட்டை வியாபாரிகள் தங்களாவே பழைய இடத்திற்கு மாற்றிக் கொண்டனர். சமூக இடைவெளியுடன், மாஸ்க் அணிந்து விற்பனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம்’ என்றார்.

Tags :
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்