×

புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கவில்லை

கோவை, செப். 25: புதிய கல்வி கொள்கை குறித்து இணையவழி கருத்து கேட்பு கூட்டத்தில் மாணவர்களிடம் கருத்து கேட்கவில்லை என மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்ைம செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மத்திய அரசின் சார்பில் புதிய தேசிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தில் அமல்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய தேசிய கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவினர் தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம் கருத்துகளை கேட்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். இதையடுத்து, நேற்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம் நிபுணர் குழு கருத்துகளை கேட்டது.

இதில், காலை 9.30 மணி முதல் கருத்து கேட்பு கூட்டம் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டது. அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து புதிய கல்வி கொள்கை குறித்த இணையவழியில் கருத்து கேட்பு கூட்டத்தை நேற்று நடத்தியது. இதில், மதுரை காமராஜர்  பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பெற்றோர், மாணவர்களிடம் கருத்துகளை கேட்டனர். இவர்களிடம் பெறப்பட்ட கருத்துகள் அறிக்கையாக அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் சார்பில் மாணவர்களிடம் கருத்துகளை கேட்கவில்லை எனவும், பல்கலைக்கழங்கள் தங்களுக்கு சாதகமான மாணவர்களிடமும், பெற்றோரிடமும் கருத்துகளை கேட்டுள்ளதாக அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்வதற்கு தமிழக அரசு நியமித்த குழு, சிலரிடம் மட்டுமே கருத்துகளை கேட்டு வருகிறது. மாணவர் அமைப்பு, கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்துக்களை கேட்க வேண்டும் என வலியுறுத்தி உயர்கல்வித்துறையின் முதன்ைம செயலாளருக்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை