பரமத்திவேலூர், மார்ச் 19: கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கபிலர்மலை ஒன்றியத்திற்குட்பட்ட இருகூர், கோப்பணம்பாளையம், கொந்தலம், பிலிக்கல்பாளையம், வடகரையாத்தூர் உட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் மெகராஜ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் இருக்கூர் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ₹71 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம், கோப்பணம்பாளையத்தில் ₹4.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் தரைமட்ட பாலம், கொந்தளம் ஊராட்சி பொன்மலர் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ₹12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.