×

லோயர்கேம்ப் மருத்துவ முகாமில் கலெக்டர் ஆய்வு

கூடலூர், மார்ச் 18: கூடலூர் அருகே லோயர்கேம்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று தடுப்பு மருத்துவ முகாமை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று ஆய்வு
செய்தார். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தேனி மாவட்ட தமிழக கேரள எல்லைப் பகுதிகளான கம்பம்மெட்டு, போடிமெட்டு, லோயர்கேம்ப் பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம், பறவைக்காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டு வாகனங்களில் வருபவர்களை தீவிரமாக பரிசோதித்து வருகிறது. முகாமில் உள்ளவர்கள் பயணிகளிடம் கொரோனா வைரஸ் குறித்தும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், வைகை அணை, கும்பக்கரை அருவி, மேகமலை, சினனசுருளி மற்றும் சுருளி அருவியை இம்மாத இறுதிவரை மூடுவதற்கு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், எல்லையோர பகுதியான லோயர்கேம்பில் உள்ள கொரோனா தொற்று தடுப்பு மருத்துவ முகாமில், சுகாதாரத்துறை, காவல்துறை, கால்நடைத்துறை செய்துள்ள கண்காணிப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளையும், கேரளாவிலிருந்து திரும்பும் தோட்ட தொழிலாளர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நடத்தும் சோதனைகளையும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று மாலை ஆய்வு செய்தார். பின்னர் எல்லைப்பகுதியான குமுளியில் கண்காணிப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தார். அவருடன் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னகண்ணு, கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன் உடனிருந்தனர்.

Tags : Lowercamp Medical Camp ,
× RELATED தகாத உறவை தட்டி கேட்ட மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு