×

கோடைகாலம் தொடங்கும் நிலையில் கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டால் சமாளிப்பது எப்படி உத்தமபாளையம் ஒன்றியத்தில் நடக்குது ஆய்வு

தேவாரம், மார்ச் 18:  கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், உத்தமபாளையம் ஒன்றிய கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டால், அதை சமாளிக்க ஆய்வு நடந்து வருகிறது. கிராமங்களில் குடிநீர் பிரச்னை குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 கிராமங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான கிராமங்களுக்கு பெரியாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், தேவாரம் பகுதியைச் சுற்றிலும் உள்ள பெரும்பாலான கிராமங்களில் போர்வெல் மூலம் குடிநீர் விநியோகம் செய்கின்றனர். கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், கிராமங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க என்னனென்ன வசதிகள் செய்ய வேண்டும். கிராமந்தோறும் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள், குடிநீர் வராத காலங்களில் மாற்றுவழி என்ன ஆகியவை குறித்து அறிக்கை வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுள்ளார்.

இதனடிப்படையில் அனைத்து கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் இதற்கான ஆய்வுப் பணி நடக்கிறது. இன்னும் 13 நாட்களில் கோடைக்காலம் தொடங்குகிறது. ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை கடுமையாக வெயில் கொளுத்துவதுடன், குடிநீர் பிரச்சனையும் ஏற்படும். எனவே, குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்தும் ஆராய்வதற்கான கணக்கெடுப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கோடை காலத்தில் ஏற்படக்கூடிய குடிநீர் பிரச்னைகளால் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை சரிசெய்யும் வகையில், திட்டமிடல் தொடங்கி உள்ளது’ என்றனர்.

Tags : villages ,Uttamapayalam Union ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...