×

பேச்சு வார்த்தையில் உடன்பாடு சித்தா கல்லூரி மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது


நெல்லை, மார்ச் 18:  விடுதி வசதி கோரி நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்த உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். பாளை. அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வண்ணார்பேட்டையில் இயங்கி வந்த விடுதி கட்டிடம் சேதமடைந்தது. இதையடுத்து அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். 2 ஆண்டுகள் கடந்த பிறகும் மாற்று விடுதி கூட வழங்காததைக் கண்டித்து கல்லூரி வளாகத்திற்குள் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். தற்காலிக மாணவர் விடுதி என்ற பதாகையுடன் பந்தல் அமைத்து, தங்களது உடமைகளுடன் கல்லூரி வளாகத்திற்குள் தங்கினர். அவர்களிடம் கல்லூரி முதல்வர் விக்டோரியா பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் கல்லூரியை காலவரையின்றி மூட நேற்று முன்தினம் சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் விக்டோரியா உத்தரவு பிறப்பித்தார். இதனால் போராடிய மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால் மாணவிகள் மற்றும் பிற மாணவர்களும் கல்லூரியை விட்டு வெளியேறிய நிலையில் விடுதிக்காக போராடிய மாணவர்கள் நேற்று முன்தினம் இரவிலும் அதே இடத்தில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நள்ளிரவு வரை 2 முறை போலீஸ் அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

நேற்று 2வது நாளாக சித்தா கல்லூரி மாணவர்கள், கல்லூரிக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அழைப்பு விடுத்தார். அதன்பேரில் கல்லூரி முதல்வர் விக்டோரியா மற்றும் கல்லூரி அலுவலர்கள் 4 பேர் முதலில் கலெக்டரை அலுவலகத்தில் சந்தித்து பேசினர். தொடர்ந்து மாணவர்கள் பிரதிநிதிகள் 6 பேர் கலெக்டரை சந்தித்தனர்.
பின்னர் வெளியே வந்த மாணவர்கள் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதி வசதி இல்லாமல் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கலெக்டரிடம் விளக்கினோம். எங்களது கருத்துகளை கேட்ட கலெக்டர் இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநருடன் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் தற்காலிக விடுதி ஏற்பாடு செய்வதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம், என்றனர். இதையடுத்து மாலை 5 மணிக்கு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் 2 நாள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் சித்தா கல்லூரி நிர்வாகம் நிம்மதி அடைந்தது. இதனிடையே அரசு சித்தி மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஜான்ஸ் கல்லூரியுடன் இணைந்த விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் விக்டோரியா தெரிவித்து உள்ளார்.

Tags : talks ,Siddha College ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...