×

குழந்தைகளை பிரிந்து வீட்டைவிட்டு வெளியேறியவர் 26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த தாய்: குற்ற ஆவண காப்பகம் நடவடிக்கை

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டதால் தனது 4 குழந்தைகளுக்கும் எலி மருந்து கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண், 26 ஆண்டுகளுக்கு பிறகு மாநில குற்ற ஆவண காப்பக போலீசார் உதவியால் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் இம்முல் நர்வா கிராமத்தை சேர்ந்தவர் சின்னஞ்சையா (64). இவரது மனைவி நீலம்மாள் (60). தம்பதிக்கு கவிதா என்ற மகளும் ராஜேஷ்கண்ணா, மையூரி, சந்தோஷ்குமார் என்ற 3 மகன்கள் உள்ளனர்.

நீலம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு சமைத்த உணவில் எலி மருந்தை கலந்து தனது 4 பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். மயக்கமடைந்த 4 பிள்ளைகளும் வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். பின்னர் வீட்டில் இருந்து வெளியேறிய நீலம்மாளை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த 2007ம் ஆண்டு சின்னஞ்சையா இறந்துவிட்டார். இந்நிலையில் சென்னை பனையூரில் சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்து கொண்டிருந்த நீலம்மாளை தனியார் மனநல காப்பக ஊழியர்கள் மீட்டு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து மாநில குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் தாஹிராவுக்கு தனியார் மனநல காப்பக நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் காப்பத்திற்கு சென்று நீலம்மாளிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் அளித்த தகவலின்படி, ஷாம் நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஐபிஎஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உதவியுடன் நீலம்மாளின் குடும்பத்தாரை கண்டுபிடித்து தகவல் அளிக்கப்பட்டது. அதைதொர்ந்து 26 ஆண்டுகளுக்கு பிறகு, தாய் நீலம்மாளை, மீட்க மகள் உட்பட 4 பிள்ளைகளும் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். அவர்களிடம் குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் தாஹிரா நீலம்மாளை நேற்று சேர்த்து வைத்தார்.

Tags : home ,children ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு