×

ஊத்துக்கோட்டையில் முதல் முறையாக மது அருந்தி விட்டு பைக் ஓட்டிய வாலிபர் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில், குடித்து விட்டு பைக் ஓட்டிய வாலிபரை மாவட்டத்திலேயே முதன் முறையாக போலீசார் கைது செய்தனர். இதனால், ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்ஐ ராக்கிகுமாரி ஆகியோர் ஊத்துக்கோட்டை அண்ணாசிலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் தாசுகுப்பம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தாமரைக்குப்பம் கிராமத்தை சேர்ந்த நசீர் (27) என்பரை மடக்கி சோதனை செய்தனர். அவர் மது அருந்தியிருந்தது தெரிந்தது. பின்னர், அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சோதனை செய்தனர். இதில் அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மது அருந்தி விட்டு பைக் ஓட்டி வந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து நசீரை கைது செய்தனர். பின்னர், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருவள்ளூர் சிறையில் அடைத்தனர். மாவட்டத்திலேயே முதல் முறையாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக வாலிபர் கைது செய்யப்பட்டது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தணி: திருத்தணி போலீஸ் டிஎஸ்பி சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகன் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள சரஸ்வதி மில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாலங்காடு அருகே உள்ள ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (35) என்பவர் மது அருந்திவிட்டு அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கி வரும்போது போலீசார் பிடித்து சோதனையிட்டனர். மேலும் அவரைத் தொடர்ந்து திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் மது அருந்தியதற்கான சான்றிதழை பெற்று உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...