×

அன்னவத்தி ஏரியில் மண் எடுக்க அனுமதி 300 ஏக்கர் விவசாயம் அழியும் அபாயம்

தஞ்சை, மார்ச் 17: அன்னவத்தி ஏரியில் மண் எடுக்க அனுமதி அளித்ததால் 300 ஏக்கர் விவசாயம் அழியும் நிலை உள்ளது என்று தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மக்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தஞ்சை அருகே கொல்லாங்கரை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கொல்லாங்கரை கிராமத்தில் அன்னவத்தி ஏரி 94 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் 300 ஏக்கர் நஞ்சை, புஞ்சை பாசனம் பெற்று வருகிறது. இந்த ஏரியில் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட வன அலுவலர் மரம் நடும் திட்டத்தின்கீழ் ஆர்.எஸ்.பதி மரங்கள் சாகுபடி செய்த 2 ஆண்டுக்கு ஒருமுறை அம்மரங்கள் ஏலம் விடப்பட்டு ரூ.15 லட்சம் ஊராட்சிக்கு வரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஏரியில் மண் எடுத்தால் 300 ஏக்கர் சாகுபடி தன்மையை இழக்கும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது. எனவே இக்கிராமத்துக்கு தலைமுறை தலைமுறைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து பொதுமக்கள் கூறுகையில், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றனர்.இந்திய கம்யூனிஸ்ட் பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவி–்ல், பூதலூர் வட்டம் திருச்செனம்பூண்டி, பாபநாசம் படுகை கிராமத்தை சேர்ந்த 150 ஆதிதிராவிட குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கு முன் கோவிலடி அன்னசத்திரம் அறக்கட்டளை சொத்துக்களில் வேலை செய்வதற்காக நத்தத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது அந்த குடும்பங்களில் உள்ள மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி விட்டதால் இடநெருக்கடி உள்ளது. இதையடுத்து கோவிலடி அன்னசத்திரம் அறக்கட்டளை தலைவர் ராயர் (எ) பிரபாகருடன் பூதலூர் தாசில்தார் ஆகியோர் கடந்தாண்டு நவம்பர் 4ம் தேதி நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் மேற்குறிப்பிட்ட குடியிருப்பில் உள்ள காலியிடத்தை உபரி குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க இசைவு தெரிவித்துள்ளார். எனவே இடநெருக்கடி காரணமாக திருச்சென்னம்பூண்டி, பாபநாசம் படுகையை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் கல்லணை நெடுஞ்சாலையோரம் குடியிருந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கும் சேர்த்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நில எடுப்பு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அகில பாரத இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் வேல்முருகன் அளித்த மனுவில், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பின்புறத்தில் உள்ள பொற்றாமரை குளத்தை சுற்றி அனுமதி பெறாமல் பல கட்டிடங்கள் இருந்தன. அதை மாவட்ட நிர்வாகம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அப்புறப்படுத்தியது. இதையடுத்து இந்த கோயிலின் பின்புறம் சுகாதார சந்து மற்றும் மக்கும், மக்காத குப்பைகளை சேமித்து வைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டு தூய்மை பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனிநபர் ஒருவரால் மலர் வியாபாரத்துக்காக சுகாதார சந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மலர் வியாபாரத்துக்காக இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் குப்பை தொட்டிகள் வைக்க இடமின்றி கோயிலின் முதன்மை வாயில் அருகே குப்பையை கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள கழிவறை சம்பந்தப்பட்ட நபரால் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் கோயிலை சுற்றி சிறுநீர், மலம் கழிப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சுகாதாரத்தை பேண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒரத்தநாடு கக்கரையை சேர்ந்த சாமிமனோகரன் அளித்த மனுவில், கக்கரையில் எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலத்தை மீட்க சென்றால் கொலை செய்ய வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். எனவே இப்பிரச்னையில் தலையிட்டு எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வேங்கராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த வைத்திலிங்கம் அளித்த மனுவில், வேங்கராயன்குடிகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சம்பா பருவத்துக்கு பயிர் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். பயிர் கடன் தருவதாக கூறியதை நம்பி நான் வெளியில் அதிக வட்டிக்கு கடன் பெற்று சாகுபடியை செய்தேன். ஆனால் பின்னர் பயிர் கடன் தர வங்கி செயலாளர் மறுத்துவிட்டார். இதனால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. எனது குடும்பம் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டது. ஏற்கனவே நான் பயிர் கடன் வாங்கி முறையாக வட்டியுடன் திரும்ப செலுத்தியுள்ளேன். எனவே எனக்கு பயிர் கடன் தந்து எனது குடும்பத்தை காக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.3ம் பாலினத்தவர்கள் அளித்த மனுவில், தஞ்சை மாநகரில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதில் பழைய பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 3ம் பாலினத்தவர்களுக்கு கடைகள் ஒதுக்கி தந்தால் ஓட்டல் நடத்தி பிழைத்து கொள்வோம். எங்களின் வாழ்வாதாரம் உயர பேருந்து நிலையத்தில் கடை ஒதுக்கி தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விவசாயிகளிடம் கெடுபிடி
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க அம்மையகரம் ரவிச்சந்தர் அளித்த மனுவில், தஞ்சையில் வரும் 20ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டுமென முடிவு செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் ஜனநாயக வழியில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு. கூட்டத்திற்கு எந்த பங்கமும், இடையூறும் விவசாயிகள் ஏற்படுத்தமாட்டார்கள். விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் கூட்டத்தில் போலீசாரின் நடவடிக்கை அமைந்தால் இந்த அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் அவப்பெயர் ஏற்படுத்திவிடும். எனவே இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
396 மனுக்கள் குவிந்தன

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 396 மனுக்களை பெற்று கொண்டார். இதையடுத்து பூதலூர் வட்டம் கூத்தூரை சேர்ந்த முனியாண்டி என்பவர் மின்சாரம் தாக்கி இறந்ததால் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம்  காசோலை வழங்கினார். வருவாய்த்துறை சார்பில் 3 பேருக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான ஆணை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 2 பேருக்கு கருணை அடிப்படையில் ஊர்நல அலுவலர் பணிக்கான ஆணை, கலெக்டரின் தன்விருப்ப நிதியின்கீழ் 3 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை, பட்டுவளர்ச்சித்துறை சார்பில் சிறந்த 3 பட்டு விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் பரிசுத்தொகையை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.

Tags : lake ,Annawati ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு