×

ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்

கோவை, மார்ச். 17: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜாமணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக அளித்தனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வேளாண் இடுபொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும்.   மத்திய அரசு விவசாய பொருட்களான உரம், பூச்சி மருந்து, நுண்ணூட்ட சத்துகள், டிராக்டர் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பை 5 முதல் 18 சதவீதம் வரை உயர்த்தி விவசாயிகளின் தலையில் பெரும் சுமையை உருவாக்கி உள்ளது. விவசாயிகளை காப்பற்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பை குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பாக அதன் தலைவர் மணி அளித்துள்ள மனுவில், கோவை சாய்பாபா காலனி பகுதியில் சாலையோர மற்றும் நடைபாதை பகுதிகளில் தள்ளுவண்டி, டிபன், கீரை, பழங்கள், உணவு வகைகள் உள்ளிடவைகளை வியாபாரம் செய்து வருகிறோம். இதில் வரும் சொற்ப வருமானத்தை நம்பியே குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம். இதனிடையே காவல்துறையினர் எங்களை வியாபாரம் செய்யக்கூடாது. நாங்கள் சொல்லும் வரை தள்ளுவண்டிகளை போடக்கூடாது என கூறி எங்களை வியாபாரம் செய்யவிடாமல் தடுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பாக அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் 238 கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுக்கும் மேலாக கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், ஒ.எச்.டி. ஆபரேட்டர்கள், தினக்கூலி தூய்மை பணியாளர்கள் என 5000 மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை சிறப்பு காலமுறை ஊழியர்களாக்கி பணிக்கொடை ஒய்வூதியம் வழங்க வேண்டும். மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : GST ,
× RELATED ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை...