×

கோடையில் கால்நடைகளுக்கு பசும்தீவனம் கிடைப்பதால் பால்வளம் பெருகுகிறது

அரியலூர்,மார்ச்17: பச்சை காய்கனி கழிவுகள் உடனுக்குடன் வழங்குவதால்கோடைநாளில் கால்நடைகளுக்கு பசும்தீவனம் கிடைப்பதால் பால்வளம் பெருகுகிறது என அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்தார். அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பெரியத்தெருவில் நகராட்சியின் சார்பில் தினசரி சந்தையில் உருவாகும் பசுமை கழிவுகள் கால்நடைகளுக்கு பசும் தீவனமாக வழங்கப்படும் பணியினை கலெக்டர் ரத்னா துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், அரியலூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் செம்மைபடுத்திடும் நோக்கில் பல்வேறு செயலாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நகராட்சி பரப்புரையாளர்கள் தொடர்ச்சியாக மக்கும் மற்றும் மக்காதக்குப்பைகள் தரம் பிரித்தலின் அவசியம் குறித்து தினசரி வீடுகள்தோறும் விழிப்புணர்வு செய்யப்பட்டதின் காரணமாக வீட்டு உரிமையாளர்களால் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு தினசரி வீடுகள்தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து பணியாளர்களால் சேகரம் செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்கும் கழிவுகளிலிருந்து இயற்கை நுண்உரம் தயாரிக்கும் மையத்தில் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டு, தோட்டக்கலைத்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பிரதி வாரம் ஞாயிற்றுகிழமை சந்தை நடைபெறும் பகுதியில் இயற்கை உரத்தின் முக்கியதுவத்தை பொதுமக்கள், பெண்கள் தெரிந்துக்கொண்டு வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் ஆகியவகைகள் அமைத்து தோட்டப்பயிற்களுக்கு இயற்கை உரத்தை இடுவது சம்பந்தமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரியலூர் நகராட்சி பகுதியில் உள்ள காய்கனி தினசரி சந்தையில் உருவாகும் பச்சை காய்கனி கழிவுகளை பசுமை நிலை வாடுவதற்கு முன்னர் நகராட்சி பணியாளர்கள் மூலம் சேகரம் செய்து மாடுவளர்ப்போரின் தொழுவத்திற்கே நேரிடையாக சென்று மாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தினசரி சந்தையில் உருவாகும் பசுமை கழிவுகள் பயனற்ற நிலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் தடுக்கப்பட்டு, அதனை கால்நடைகளுக்கு விரைவாக பசும் தீவனமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் கால்நடைகளுக்கு உலர்தீவனம் வழங்கப்பட்டு வரும் நிலையில், நகராட்சி பணியாளர்களால் தினசரி சந்தையில் உருவாகும் பச்சை காய்கனி கழிவுகளை உடனுக்குடன் கால்நடைகளுக்கு வழங்குவதால் கோடை நாளில் கால்நடைகளுக்கு பசும்தீவனம் கிடைப்பதால் கால்நடைகளுக்கு சத்தான தீவனம் கிடைப்பதோடு பால்வளமும் பெருகுகிறது.

மேலும், நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் தினசரி உருவாகும் பச்சை காய்கனி கழிவுகளை தேவையற்ற வகையில் வெளியில் வீசாமல் அவைகளை இயற்கை உரமாக மாற்றி வீட்டில் வளரும் செடிகளுக்கும், மாடி தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம். தினசரி பச்சை கழிவுகள் 500 கிலோ உருவாகும் இடத்திலே சேகரம் செய்வதால், கழிவுகளை உருவாகும் இடத்திலேயே குறைப்பதற்கு உரிய தீர்வாகும். மேற்கண்ட இடம் தூய்மையாக பராமரிக்கப்படும். உடனடியாக கால்நடைகளுக்கு வழங்குவதால், கால்நடைகளும் பயனடையும், இதனை கால்நடைகள் வளர்ப்போர் பின்பற்றிட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் குமரன், தாசில்தார் கதிரவன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED சீரமைக்க கோரிக்கை 70 வயது கடந்த...