×

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்

அரியலூர்,மார்ச்17: அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கொரோனா வைரஸ் நோய் உலக அளவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லை என்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விமான நிலையங்கள் உள்ள மாவட்டம், தமிழ்நாடு எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தற்காலிகமாக மூடிவைக்க உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகளும் லிரிநி முதல் 5ம் வகுப்பு வரை 31.03.2020 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மை படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும் பொது இடங்களில் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை காக்க வேண்டும். குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாகவும் கழிவிட வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம். இதனை குழந்தைகளையும் பின்பற்ற வைக்க வேண்டும்.

சமீபத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் இருமல், சளி, காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும். மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 24 மணி நேர உதவி எண்.011 -23978046, 044-29510400, 044-29510500-ல் தகவல் தெரிவிக்கலாம். மேலும் 104 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள படிகட்டுகளின் கைப்பிடிகள், கதவுகளின் தாழ்பாழ்கள் மற்றும் பொதுவான இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, மருத்துவக்கல்லூரித் தலைவர் முத்துகிருஷ்ணன், திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குநர் பழனிசாமி, கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார மருத்துவர் அலுவலர்கள், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Coronavirus Awareness Meeting To Avoid Immunity ,
× RELATED மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு...