×

கரிவலம்வந்தநல்லூரில் 36 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ரயில்நிலையம்

சங்கரன்கோவில், மார்ச் 17: சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர்  மிகவும் பிரசித்தி பெற்ற ஊராகும். இங்குள்ள  பால்வண்ணநாதர் சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு  விவசாயம் மற்றும் விசைத்தறி தொழில் பிரதானமானதாகும். இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்காக பல ஆண்டுகளுக்கு முன் கரிவலம்வந்தநல்லூரில் 3 கிலோ மீட்டர் தொலைவில் சென்னிகுளம் என்ற பகுதியில் ரயில் நிலையம் செயல்பட்டுள்ளது. இந்த ரயில்நிலையத்தை கரிவலம்வந்தநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களான சென்னிகுளம், கலிங்கப்பட்டி, சுப்புலாபுரம், மேலவயலி, குவளைக்கண்ணி, பனையூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்தனர். மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போதே குறைவான பயணிகள் வருகை, மற்றும் செலவினத்தை கணக்கில் கொண்டு ரயில்நிலையம் மூடப்பட்டது. தற்போது மக்கள் தொகை பெருகி விட்ட நிலையிலும், விவசாயம், விசைத்தறி தொழில்கள் பெருகி விட்ட நிலையிலும் ரயில் போக்குவரத்து இப்பகுதி மக்களுக்கு மிகுந்த அத்தியாவசிய தேவையாக மாறியது.  கடந்த 2000ம் ஆண்டு சென்னை- செங்கோட்டை இடையே மீட்டர் கேஜ் பாதைகள் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கியபோதே இப்பகுதி மக்கள் கரிவலம்வந்தநல்லூர் ரயில்நிலைய செயல்பாட்டை மீண்டும் துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அகலரயில்பாதை பணி முடிந்த நிலையிலும் ரயில்நிலையம் செயல்படாமல் போனதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.இதையடுத்து அப்பகுதிபொது மக்கள் ரயில்வே அதிகாரிகள், மத்தியஅமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் ரயில்நிலையம் செயல்பாட்டிற்கு வரவில்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து ரயில்நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள், விசைத்தறி தொழிலாளர்கள் அவதி கரிவலம்வந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் விசைத்தறி மற்றும் விவசாயம் முக்கிய தொழில்களாகும். இங்குள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களான பூ, காய்கறிகள் உள்ளிட்டவை சங்கரன்கோவில், தென்காசி, ராஜபாளையம், வில்லிபுத்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல பஸ்களை நம்பி உள்ளனர். பஸ்களில் நடத்துனர்களிடம் மல்லுக்கட்டி பொருட்களை ஏற்றி செல்லும் சூழ்நிலை நிலவுகிறது. இப்பகுதியில்  1000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் உற்பத்தியாகும் பொருட்களை அனைத்து பகுதிகளுக்கு கொண்டு செல்லவும், விசைத்தறிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வர ரயில்போக்குவரத்து அவசியமாகும்.
இது குறித்து சென்னிகுளம் பகுதியை சேர்ந்த ராஜநாராயணன் தெரிவித்தாவது: கரிவலம்வந்தநல்லூர் சென்னிகுளத்தில் நிறுத்தபட்டுள்ள ரயில்சேவையை துவக்கினால் இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை செல்லவும், ராஜபாளையம், வில்லிபுத்தூர், விருதுநகர், சிவகாசி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளுக்கு செல்ல ரயில்போக்குவரத்து அவசியமாக உள்ளது. மேலும் வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு ரயில்போக்குவரத்து மட்டுமே வசதியாக இருக்கும். ரயில்நிலைய செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என கூறினார்.

Tags : Railway Station ,Karivalavananthanallur ,
× RELATED மின்சார ரயில் சேவை ரத்து