×

வேளச்சேரி ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் கூடுதல் கட்டணம்: பயணிகள் அதிருப்தி

வேளச்சேரி: வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ‌புறநகரை சேர்ந்த ஏராளமான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளிக்கரணை, மேடவாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள   பகுதிகளில் வசிப்பவர்கள் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் வேளச்சேரி ரயில் நிலையம் வரை தங்கள் சொந்த வாகனங்களில் வந்து, இங்குள்ள வாகன நிறுத்தத்தில்   நிறுத்திவிட்டு, இங்கிருந்து ரயில் மூலம் சென்னையில் அவர்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு வாகனங்களில் வரும் பயணிகளின் வசதிக்காக வேளச்சேரி ரயில் நிலையத்தில் 2 வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக பள்ளிக்கரணை கைவேலி அருகே எம்.ஆர்.எஸ்.எம்.ஆர்.டி.எஸ் சாலையை ஒட்டி ஒரு பார்க்கிங் பகுதியும், வேளச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு எதிர்புறத்தில் இன்னொரு பார்க்கிங் பகுதியும் உள்ளன. இந்த பார்க்கிங் பகுதிகளில் சைக்கிளுக்கு ₹5, பைக் மற்றும் மொபட்டுக்கு ₹10, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹15 வீதம் (12 மணி நேரத்திற்கு) கட்டணமாக வசூலிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல் மாத கட்டணம் சைக்கிளுக்கு ₹150, பைக் மற்றும் மொபட்டுக்கு ₹300, காருக்கு ₹450 வீதம் வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளிக்கரணை மார்க்கமாக உள்ள பார்க்கிங் பகுதியில் மட்டும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது, சைக்கிளுக்கு ₹10, பைக் மற்றும் மொபட்டுக்கு ₹15, காருக்கு ₹20 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் மாத கட்டணம் சைக்கிளுக்கு ₹300, பைக் மற்றும் மொபட்டுக்கு ₹450, காருக்கு ₹600 வீதம் அடாவடியாக வசூலிக்கப்படுகிறது. அருகிலுள்ள மற்றொரு பார்க்கிங் பகுதியில் ரயில்வே நிர்வாகம் அறிவித்தபடி முறையாக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இங்கு மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி பயணிகள் கேட்டால், “விருப்பமிருந்தால் வாகனத்தை நிறுத்துங்கள். இல்லை என்றால் எடுத்துக் கொண்டு செல்லுங்கள்” என பார்க்கிங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் அடாவடியாக பேசுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : railway parking area ,Velachery ,
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...