×

கண்மாய்களில் பழுதான மடையை சீரமைக்க கோரிக்கை

திருவாடானை, மார்ச் 13: ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என திருவாடானை தாலுகா அழைக்கப்படுகிறது. இந்த தாலுகாவில் அதிகளவில் பெரிய மற்றும் சிறிய பாசன கண்மாய்கள் உள்ளன. மாவட்டத்திலேயே அதிக நெல் உற்பத்தி இந்த தாலுகாவில் விளைவிக்கப்படுகிறது.இப்பகுதியிலுள்ள பெரும்பாலான கண்மாய்களில் மடை மற்றும் கழுங்கு போன்றவைகள் பல ஆண்டுகளாக பராமரிக்காமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது கண்மாய்களில் தேங்கியுள்ள நீரை போதிய அளவில் தேக்கி வைக்க முடியவில்லை என விவசாயிகள் வருத்தப்படுகின்றனர். இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்போது அரசு குடிமராமத்து பணிகள் மூலம் சில கண்மாய்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் பெரிய கண்மாய்களும், 200 அதிகமான சிறுபாசன கண்மாய்களும் உள்ள நிலையில், சில கண்மாய்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு குடிமராமத்து பணிகள் நடந்துள்ளன. ஆனால் அதிகமான கண்மாய்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் மடை கழுங்கு பகுதி பழுதுகளை சரி செய்யாமலும் உள்ளன. இதனால் இந்த கண்மாய்களில் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே அரசு பல வருடங்களாக பழுது நீக்காமல் உள்ள கழுங்கு மடை உள்ள கண்மாய்களை கணக்கெடுத்து அவற்றை சீரமைக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...