×

மாவட்டத்தில் வறட்சியால் விபரீதம் தரிசாக மாறும் விவசாய நிலங்கள்: விவசாயிகள் கவலை

திருவள்ளூர், மார்ச் 13: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், நெல் சாகுபடி பரப்பு மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் முற்றிலும் குறைந்ததால், விவசாய பயிர்கள் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 49,227 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடிநீர் முற்றிலும் வறண்டதாலும் 22,500 ஹெக்டேர் பரப்பாக நெல்சாகுபடி குறைந்துள்ளது. இதனால், நெல் சாகுபடி நிலங்கள் தரிசு நிலங்களாக கால்நடை மேய்ச்சலுக்கு மட்டுமே பயன்படுகிறது. சில விவசாயிகள், நெல் சாகுபடி செய்ய முடியாது என்பதால், நிலத்தில் தழைச்சத்தை அதிகரிக்க, தக்கைப்பூண்டு, சணப்பை போன்றவை விதைப்பு செய்து, பூவெடுக்கும் பருவத்தில் உழவு செய்கின்றனர். நெல்லுக்கு பதிலாக வெண்டை, கத்தரி உள்ளிட்ட பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டு கிடப்பதால், அதன் கால்வாய்கள் மூலம் நீர்ப்பாசனம் பெற்று வந்த, மானாவாரி விவசாயிகளும், நெல் பயிரிட முடியாமல் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ஏரிகள் அனைத்தும் நிரம்பி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால், நெல் பயிரிட போதுமான தண்ணீரின்றி மானாவாரி விவசாயிகள் தங்களது நிலங்களை காயவிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டதால் அப்பகுதியிலுள்ள ஏராளமான கிணறுகள், ஆழ்குழாய்களும் வறண்டுவிட்டன. கிணறுகளை ஆழப்படுத்தியவர்களும், கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தவர்களும் கடன் பெற்றதுதான் மிச்சம். தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பலர் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர். விவசாயம் மட்டுமே தெரிந்த விவசாயிகள் கோடை மழைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்தாண்டு, பருவமழை பெய்து, ஆறு, ஏரிகள் நிரம்பினால்தான் நிலத்தடி நீர் மட்டம் மேலோங்கும். அப்போது தான், விவசாயிகள் நம்பிக்கையுடன் நெல் சாகுபடி செய்ய முடியும். இல்லாவிட்டால், மாற்று விவசாயத்துக்கு மாறி விடுவார்கள் என்பது உண்மை. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ‘‘ஆறு ஏக்கரில் நெல் விவசாயம் செய்திருந்தேன். நெல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு, 30 - 45 மூட்டை நெல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு, ரூ.35 ஆயிரம் செலவு செய்தால், ரூ.25 ஆயிரத்துக்கு நெல் விற்கும். இதனால், லாபமும் கிடைப்பதில்லை, தற்போது வறட்சி ஏற்பட்டதால், நெல் சாகுபடி செய்யவே பயமாக இருக்கிறது’ என்றார்.

Tags : lands ,district ,
× RELATED 5 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்