×

ஊத்துக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் குண்டும் குழியுமான தார்ச்சாலை

ஊத்துக்கோட்டை, மார்ச் 12: ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் குண்டும் குழியுமான  தார்ச்சாலை சீரமைக்க  திமுக மகளிர் அணி கோரிக்கை வைத்துள்ளது.ஊத்துக்கோட்டை பேரூராட்சி 12வது வார்டு அண்ணாநகர் பகுதியில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள் என  100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த அண்ணாநகர் பகுதியில் திருவள்ளூர் சாலையையும் - நாகலாபுரம் சாலையையும் இணைக்கும்  சாலை உள்ளது.இச்சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதையறிந்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2016ம் ஆண்டு ₹ 50 லட்சம் செலவில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஊத்துக்கோட்டை  மின்வாரியம் சார்பில் மின்சார கேபிள் புதைப்பதற்காக இந்த சாலையை துண்டித்து கேபிள் புதைக்கும் பணிகள் நடைபெற்றது.  இதனால், இந்த சாலை சேதமடைந்து  தற்போது போக்குவரத்திற்கு லாயக்கற்று குண்டும், குழியுமாக மாறி  காணப்படுகிறது.

இச்சாலையில், இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் சைக்கிள்களிலும், கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் பைக்குகளிலும் செல்லும்போது கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். மேலும், கேபிள் புதைப்பதற்காக இச்சாலையை சேதப்படுத்திய மின் வாரியத்திற்கு சாலை அமைக்க நஷ்டஈடு வழங்க வேண்டும் என  பேரூராட்சி மூலம் கடிதம் அனுப்பினர். ஆனால், இதுவரை அதற்குண்டான நஷ்டயீட்டை  மின்வாரிய அலுவலகம் வழங்கவில்லை. இதனால், அண்ணாநகர் சாலை 2  வருடமாக குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது.இது குறித்து திமுக மகளிரணியை சேர்ந்த சாந்தி ஜான்சன் நேற்று திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் மனு கொடுத்துள்ளார். அதில், மனுவில் கூறியிருப்பதாவது,

அண்ணாநகர் பகுதியில் பேரூராட்சி மூலம் தார்ச்சாலை அமைக்கப்பட்டபோது, இந்த பகுதி மிகவும் அழகாக காணப்பட்டது, ஆனால், கடந்த 2018ம் ஆண்டு  மின் வாரியம் மூலம் இந்த தார்ச்சாலையை துண்டித்து கேபிள் புதைத்தனர். அதன் பிறகு, தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், நடந்து செல்வதற்கும், இரு சக்கர வாகனங்களில் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. இந்த சாலை திருவள்ளூர் - நாகலாபுரம் சாலை இணைக்கும் முக்கிய பகுதி ஆகும். மேலும், சாலை பள்ளத்தில் வாகனங்கள் ஏறி இறங்கும் போது தூசிகள் பறந்து  வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் பொருட்கள் சேதமடைகிறது. மேலும், சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் வீடுகளுக்குள் விழுகிறது.   இதனால், முதியவர்களும், சிறுவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.  எனவே, இந்த சாலையை விரைந்து சீரமைக்க  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Uthukottai ,area ,Anna Nagar ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...