×

திருமயம் அருகே இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

திருமயம், மார்ச் 12: திருமயம் பகுதியில் பங்குனி திருவிழா களை கட்டியது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆயிரகணக்கான பக்தர்கள் பூ தட்டு எடுத்து வழிபாடு நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு வருடம்தோறும் மாசி மாதம் பூச்சொரிதல் விழா நடத்தப்பட்டு பங்குனி மாதம் முக்கிய விழாக்கள் நடைபெறும். இதனிடையே நேற்று பங்குனி விழாவில் தொடக்கமாக பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திருமயம், கடியாபட்டி, கோட்டையூர், வீரபட்டி, மணவாளன்கரை, மகமாயிபூரம், இளஞ்சாவூர், சித்தளஞ்சாபட்டி, செங்காவிடுதி, அரசம்பட்டி, லெனாவிலக்கு, பூலிவலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தர்கள் பூத்தட்டு வைத்து ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூத்தட்டு செலுத்தி வழிபாடு நடத்தினர். இதனை அடுத்து திருமயம் சுற்று வட்டார கிராமங்களில் கரகாட்டம், பூராணநாடகம், பட்டிமன்றம், நாட்டுப்புற பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அரசு போக்குவரத்துகழகம் சார்பில் திருமயம், புதுக்கோட்டை, ராயவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. வருகிற 16ம் தேதி முதல் திருவிழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு சமுதாயத்தாரின் மண்டகப்படி முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு வழிபாடு நடத்தப்படுவதோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா 24ம் தேதி நடைபெறும். இதனை தொடர்ந்து 26ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.

Tags : ceremony ,temple ,Illanjavur Muthumariamman ,Thirumayam ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா