வெலிங்டன் கன்டோன்மென்ட் துணைத்தலைவர் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ்

குன்னூர், மார்ச் 12:  அ.தி.மு.க.வை சேர்ந்த கன்டோன்மென்ட் வாரிய துணைத்தலைவரின் வீட்டில் நீதிமன்ற ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் சிங்காரத்தோப்பை சேர்ந்தவர் பாரதியார். இவர் அ.தி.மு.க. விவசாய அணி மாநில துணைத் தலைவர். 2014ம் ஆண்டு கண்டோன்மென்ட் வாரிய தேர்தலில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது வெற்றி பெற்று துணைத் தலைவரானார்.தற்போது 6 மாதம் பதவி நீட்டிக்கப்பட்டதால், மீண்டும் போட்டியின்றி துணைத் தலைவரானார்.இவர் தனது மனைவி சாந்தி உடன் சேர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம், கோவையை சேர்ந்த அசோக் குமார் என்பவரிடம் ரூ.55 லட்சத்து 20 ஆயிரம் கடன் பெற்றார். தொடர்ந்து இருவரும் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளனர். இதனால் கடந்த 2018ம் ஆண்டு அசோக்குமார் கோவையில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பாரதியாருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் பாரதியார் ஆஜராகி, 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் அனைத்து தொகையையும் கொடுத்து விடுவதாக கூறி ஜாமீன் பெற்றார். ஆனால், தொடர்ந்து பணம் கொடுக்காததால் ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் அசோக்குமார் வழக்கு தொடர்ந்தார். அப்போது குறிப்பிட்ட தொகையுடன் வட்டியையும் சேர்த்து, ரூ.68 லட்சத்து 28 ஆயிரத்து 416 செலுத்த வேண்டும் எனவும், செலுத்தாத பட்சத்தில் வீட்டை விற்கவோ, யாரும் வாங்கவோ கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். நேற்று குன்னூர் சிங்கார தோப்பில் உள்ள பாரதியாரின் வீட்டிற்கு, நீதிமன்ற ஊழியர்கள் சென்று ஜப்தி நடவடிக்கைக்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர். இதைத்தொடர்ந்து குன்னூரில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகத்திலும் ஜப்தி நடவடிக்கை நோட்டீஸ் ஒட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Related Stories: