×

பேச்சிப்பாறை அணைப் பகுதியில் மண் அணைகள் சீரமைக்கும் பணி தொடக்கம்

குலசேகரம், மார்ச் 11:   குமரி மாவட்டத்தின் முக்கியமான நீர்நிலை பேச்சிப்பாறை அணை. இது குமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா போன்றவற்றின் பாசனத்திற்கு முக்கியமான நீராதாரமாக உள்ளது. பழமையான இந்த அணை கட்டப்பட்டு 113 ஆண்டுகள் கடந்த  நிலையில் இதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்று நீண்ட காலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ரூ.  61.30 கோடி செலவில் அணையை சீரமைக்கும் பணி கடந்த 2018ம்  ஆண்டு ஜனவரி மாதம்  தொடங்கப்பட்டது. இப்பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன.இத்திட்டத்தில் அணையின் முன்பக்கம் சாய்வு அணை அமைத்தல், வெள்ளப்பெருக்கு காலத்தில் தண்ணீரை வேகமாக வெளியேற்றுவதற்கு வசதியாக   கூடுதலாக 8 மறுகால் மதகுகள் அமைத்தல், பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க பயன்படும்  பிரதான மதகு சீரமைத்தல், அணையின் உள்சுவரில் ரசாயன கலவை பூசுதல், சாய்வு அணை சுவருக்குள் கசிவு நீர் காட்சியகம் அமைத்தல்  உள்ளிட்ட பணிகளுடன், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருக்கும் 5 மண் அணைகளை மேம்படுத்தும்  பணிகளும் இடம் பெற்றிருந்தன. இதில் மண் அணைகளை சீரமைக்கும் பணிகளை தவிர்த்து இதர பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

 பேச்சிப்பாறை அணையில் உள்ள  மண் அணைகள் சீறோ பாயின்ட் வனச்சோதனை சாவடி பகுதியிலிருந்து தொடங்கி கோதையாறு செல்லும் சாலையோரம் அமைந்துள்ளன. வெளிப்புறப்பகுதி மண்ணாலும் உள்புறம் கருங்கல் அடுக்கப்பட்டும் காணப்படும் இந்த அணைகள்  35 அடி நீர்மட்ட உயரத்திலிருந்து 48 அடி நீர்மட்டம் வரை உள்ளன.  அணையின்  நீர்மட்டம் 35 அடியை எட்டும் போது மண் அணையை தண்ணீர் மோதும். இந்த மண் அணைகள் அமைந்துள்ள பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதிகளாகும். எனவே, இங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனில் வனத்துறை அனுமதியைப் பெற வேண்டும். தற்போது அணையைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், மண் அணைகளை  பலப்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை சார்பில் வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் அனுமதி கிடைக்காமல் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மண் அணைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மண் அணைகளை சீரமைப்பதற்க்கு வனத்துறை சமீபத்தில் அனுமதிளித்தது. இதனையடுத்து சீரமைப்புப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதனால் விரைவில் பேச்சிப்பாறை அணை பராமரிப்பு பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இது குறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மண் அணைகள் வனத்துறை கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதியில் உள்ளதால், அவற்றை சீரமைப்பதற்கான அனுமதியை வனத்துறையிடம் கோரி வந்தோம். தற்போது அனுமதி  கிடைத்துள்ளது. இதையடுத்து இங்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இப்பகுதிகளில் மண்ணாலான சுவர்கள் அகற்றப்பட்டு காங்கிரீட் சுவர்கள் எழுப்பப்படவுள்ளன. இதன் மூலம் அணையில் வெள்ள அபாய அளவைக் கடந்து தண்ணீர் தேக்கப்பட்டாலும், இப்பகுதிகளில் உடைப்பு ஏற்படாது என்றனர்.  

தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி குமரி மேற்கு மாவட்ட தலைவர் ஜாண்சன் கூறியதாவது: பேச்சிப்பாறை அணையில் தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு அணை சுவர் பலபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் அணை மட்டத்திலிருந்து சுமார்  80 அடி ஆழம் வரையிலான பள்ளமான பகுதிகள் இருந்தது. வெள்ள பெருக்கு காலங்களில் மலைகளிலிருந்து அடித்து வரப்பட்ட மரதடிகள், மண், பாறைகள் போன்றவற்றால் இவைகள் நிரம்பியுள்ளது. பல இடங்களில் மணல் திட்டுகள், வண்டல் மண் குவியல்களும் அதிகம் காணப்படுகிறது. இதனால் முன் காலங்களில் தேங்கும் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் மழை காலங்களில் தேக்க முடியாத நிலையுள்ளது. இதன் பாதிப்பு பருவ மழை பொய்க்கும் காலங்களில் எதிரொலிக்கிறது.

 எனவே அணை பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த கட்டமாக தூர்வாரும் பணிகளுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். அதோடு பழமையான இந்த அணையில் சாய்வணை, அணை சுவர் பலப்படுத்துதல், மண் அணைகளை கான்கிரீட்டால் பலப்படுத்துதல் போன்றவை நடைபெற்றுள்ளதால் அணை புது பொலிவடைந்துள்ளது. அணையின் அருகில் சீறோ பாயின்ட் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் சுற்றுலாவை வளர்க்கும் வண்ணம் பூங்காக்கள், மற்றும் சூழியல் சுற்றுலாவுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இதன்மூலம் சுற்றுலா வளருவதோடு அரசுக்கு வருவாய் கிடைக்கும் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : Pachiparappa Dam ,
× RELATED பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீர்...