×

வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் தொடங்க அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பு கலெக்டர் தகவல்

வேலூர், மார்ச் 11: வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகளவில் பரவி வருகிறது. இந்தியாவிலும் வேகமாக பரவி இதுவரை 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் வரும் வாகனங்கள் மீதும் மாநில எல்லைச்சாவடியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிய தொடங்கியுள்ளனர். இந்நிலையில், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிரிமி நாசினி தெளிக்கும் பணியை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். அதில், ‘கை கழுவும் முறைகள், இருமல், சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது’ என இடம் பெற்றிருந்தது.

இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது: ‘மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் ரேஷன் கடைகளில் கொரோனா குறித்த நோட்டீஸ் தமிழில் ஒட்டப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 12 ேபர் மருத்துவ கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் வெளிநாட்டினர் மற்றும் வட இந்தியர்கள் ஏராளமானோர் தங்கி படிக்கின்றனர். அவர்கள் தங்களது சொந்த நாடு அல்லது ஊர்களுக்கு தற்போது செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களது பெற்றோரையும் இங்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், மருத்துவமனைகளில் வெளிமாநில, வெளிநாட்டவர் வருகை காரணமாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கண்டறிய புதிதாக 4 ஆய்வகங்கள் அமைய உள்ளது. வேலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி, மருத்துவமனை, சுற்றுலா தலங்களுக்கு வெளிநாடு, வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் வருகின்றனர். இதேபோல் திருப்பதிக்கு வரும் பல்வேறு மாநில பக்தர்களும், வேலூரை சுற்றிப்பார்த்துவிட்டு திரும்புகின்றனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கான ஆய்வகம் உள்ளது. இந்த ஆய்வு மையத்தை கொரோனா வைரஸ் மற்றும் வைரல் காய்ச்சலுக்கான ஆய்வகமாக மாற்ற அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார துணை இயக்குனர் சுரேஷ், மாநகராட்சி நகர் நல அலுவலர் மணிவண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். கொரோனா பாதிப்பு பரவாமல் தடுக்க காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள ஆந்திர எல்லை பகுதியில் அனைத்து வாகனங்கள் மீதும் கிருமிநாசினி மருந்து தௌிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Colonel Laboratory ,Vellore Government Medical College ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...