×

கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்

கோவில்பட்டி, மார்ச் 11: கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் வாயில் கருப்பு துணி  கட்டி போராட்டம் நடத்தினர். இளையரசனேந்தலைச் சேர்ந்த 12 வருவாய்  கிராமங்களை கோவில்பட்டி ஒன்றியத்தில் சேர்க்கக்கோரி, விவசாயிகள்  பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியபோதும் பலனில்லை. மேலும் தென்காசியில்  நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் இதுகுறித்து மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆவேசமடைந்த தேசிய  விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நூதன போராட்டம் நடத்த முடிவுசெய்தனர்.

 இதன்படி தங்களது வாயில் கருப்பு துணி  கட்டியபடி மாநிலத் தலைவர் ரெங்கராயலு தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்  நடத்தினர். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் இதுகுறித்த கோரிக்கை மனுவை  அளித்து சென்றனர். கருப்பு கொடி போராட்டம்: போராட்டத்திற்கு பின்னர் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இனியும் கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் நாளை மறுதினம் (13ம் தேதி) இளையரசனேந்தல் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும்’’ என்றனர்.

Tags : office ,Kovilpatti RTO ,
× RELATED மின்மாற்றி வெடித்ததில் ஊழியர்...