×

நாமக்கல் நகராட்சியில் ₹224 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

நாமக்கல், மார்ச் 11: நாமக்கல் நகராட்சியில் ₹224 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய குடிநீர் திட்டப்பணிகள் செப்டம்பரில் முடிவடையும். இந்த திட்டத்தின் மூலம் தினமும் கூடுதலாக 1.76 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என எம்எல்ஏ பாஸ்கர் கூறினார். நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பாஸ்கர் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், மின்வசதி, சாக்கடைவசதி வேண்டி மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ பாஸ்கர், நகராட்சி ஆணையாளரை கேட்டுக்கொண்டார். பின்னர் எம்எல்ஏ பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்காக புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் ₹224 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக காவிரி ஆற்றில் ஜேடர்பாளையத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 9 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு லட்சம் லிட்டர் முதல் 9 லட்சம் லிட்டர் வரை கொள்ளளவு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி முடிவடைந்து, குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த புதிய குடிநீர் திட்டம் நாமக்கல் நகராட்சி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது 24 மணி நேரமும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும். நபர் ஒருவருக்கு தினமும் 150 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். நாமக்கல் நகராட்சியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 3 குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தினமும் 1.76 கோடி லிட்டர் காவிரி குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கும். 9 ஊராட்சிகளில் 25 ஆயிரம் குடிநீர் புதிய இணைப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கான உத்தரவை எம்எல்ஏ பாஸ்கர் பெண்களுக்கு வழங்கினார். அப்போது, சேலம் மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் அசோக்குமார், செயற்பொறியாளர் கமலநாதன், குடிநீர்வடிகால் வாரிய செயற்பொறியாளர் நடராஜன், நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கிர் பாஷா, இன்ஜினியர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காலிமனை வரி
ரசீது பெற காலதாமதம்கூட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் 50க்கும் மேற்பட்டோர் வந்து நகராட்சியில் காலிமனை வரி செலுத்திய பிறகு, அதற்கான ரசீதுகொடுக்க அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். இதனால் நிலத்தை பத்திர பதிவு செய்யமுடியவில்லை என எம்எல்ஏவிடம் மனு அளித்தனர். காலிமனை ரசீது வழங்க தனியாக வருவாய் ஆய்வாளரை நியமித்து விரைவாக வழங்கவேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார்.
இதுகுறித்து நில புரோக்கர்கள் கூறுகையில், காலிமனை வரி செலுத்தியதற்கான ரசீதை கொடுத்தால் தான் பத்திரபதிவு செய்ய முடியும் என எந்த விதிமுறையும் பத்திரபதிவுத்துறையில் இல்லை. ஆனால் நாமக்கல் பத்திரபதிவு துறையில் புதியதாக ரசீது கேட்டு காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டினர்.

Tags : Namakkal Municipality ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை