வீட்டை அபகரிக்க முயன்றதாக கூறி கோவிலாறு மலைப்பகுதியில் மலைவாழ் இன மக்கள் தஞ்சம்

வத்திராயிருப்பு, மார்ச் 11:வத்திராயிருப்பு அருகே மலைவாழ் இன மக்களின் வீட்டை வேறு சமூகத்தினர் அபகரிக்க முயன்றதாக கூறி கோவிலாறு மலைப் பகுதியில் மலைவாழ் இன மக்கள் தஞ்சமடைந்தனர். வத்திராயிருப்பு பகுதியை சுற்றி மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. இதில் தாணிப்பாறை ராம்நகர், நெடுங்குளம் குட்டம், பிளவக்கல் அணை வினோபா நகர், அத்திகோவில் உள்ளிட்ட இடங்களில் மலைவாழ் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பிளவக்கல் அருகே வினோபா நகரில் மலைவாழ் இன மக்களுக்கு 15 வீடுகள் உள்ளன. இதில் இரண்டு வீட்டில் ஒதுக்கப்பட்ட மலைவாழ் இனத்து குடும்பங்கள் அங்கு இல்லை. இதனால் அந்த வீட்டில் வேறு சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

இதனால் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வீடுகளை அபகரிக்க முயன்றதாக மலைவாழ் இன மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் மலைவாழ் மக்களை விரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கோவிலாறு அணை பகுதியில் உள்ள மலை அடிவாரப்பகுதியில் மலைவாழ் இனமக்கள் கைக்குழந்தையுடன் சமையல் செய்து சமைத்து அங்கேயே தங்கி இருந்தனர். இதுகுறித்து மலைவாழ் இனமக்கள் சம்மந்தப்பட்ட காவல்துறை மற்றும் வனத்துறையினரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர். இந்த தகவலறிந்த சிவகாசி ஆர்டிஓ தினேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மலைவாழ் இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இரண்டு வீடுகளில் ஒதுக்கப்பட்ட மலைவாழ் இன மக்கள் குடியிருக்காமல் வேறொரு நபர்கள் குடியிருந்ததால் அந்த வீட்டை 15 நாட்களுக்குள் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories:

>