×

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலம், மார்ச் 10:   விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கீழப்பாளையூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடியிருக்கும் பகுதியின் அருகே கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு மது போதையில் வாலிபர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை சம்பவம் நடந்தேறியது. இதன் காரணமாக அப்பகுதியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதற்காக நேற்று டாஸ்மாக் கடை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அவர்களை முற்றுகையிட்டு டாஸ்மாக் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அதனைத் தொடர்ந்து கருவேப்பிலங்குறிச்சி- தேவங்குடி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் பகுதியில் டாஸ்மாக் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக சப்- இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு
நிலவியது.  

Tags : protest ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...