×

இலக்கை நோக்கி... நகரமைப்பு வரைபட அனுமதி கிடைக்குமா?

சிவகாசி, மார்ச் 10: சிவகாசி நகராட்சி தெய்வானை நகரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நகரமைப்பு வரைபட அனுமதி வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகராட்சி 32வது வார்டு பகுதியில் தெய்வானை நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அச்சகங்கள், பாலித்தீன் கம்பெனி, பட்டாசு கடை, கட்டிங், லேமினேஷன் கம்பெனிகளும் இப்பகுதியில் அதிகளவில் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். தெய்வானை நகர் பகுதியில் உள்ள காந்தி ரோட்டில் உள்ள இடங்களுக்கு மட்டும் நகராட்சி வரைபட அனுமதி வழகியுள்ளது. மற்ற இடங்களில் நகரமைப்பு வரைபட அனுமதி வழங்கப்படவில்லை. நகரின் மைய பகுதியை ஓட்டி தெய்வானை நகர் அமைந்துள்ளதால், இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது.இதனால் ஏராளமான நிறுவனங்கள், வீடுகள் புதிது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட வாறுகால் பணி தரமாக நடைபெறாததால் சேதமடைந்து கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்கு அருகிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் நிலை உள்ளது.

சிவகாசி நகராட்சி பகுதியில் இருந்து வரும் மழைநீர் தெய்வானை நகர் கிருதுமால் ஓடை வழியாக சென்று மீனம்பட்டி கண்மாயை அடைகிறது. கிருதுமால் ஓடையில் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி தரமின்றி நடைபெற்றதால் சுவர்கள் இடிந்து ஓடையில் விழுந்து கிடக்கிறது. இதனால் கிருதுமால் ஓடையை ஓட்டியுள்ள சாலை சரிந்து வருவதால் மழைக்காலங்களில் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்து நிலவுகிறது. தெய்வானை நகர் நுழைவு பகுதியில் உள்ள காந்தி ரோட்டை அடுத்துள்ள இடங்களில் அச்சகம், பாலித்தீன் கம்பெனிகள் அதிகம் இயங்கி வருகிறது. ஆனால் இந்த இடங்களுக்கு நகராட்சி வரைபட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இங்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை. மண் சாலையாக உள்ளதால் இந்த பகுதிகளுக்கு டாரஸ் லாரிகளில் பேப்பர் பண்டல், பாலித்தீன் மூலப்பொருட்கள் டன் கணக்கில் ஏற்றி செல்லும் வாகனங்கள் சிரமப்படுகின்றன.

மழைக்காலங்களில் இந்த இடங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. காந்தி ரோட்டில் உள்ள கிருதுமால் ஓடையை கடந்து செல்ல பாலம் அமைத்துள்ளனர். ஆனால், பாலம் பலவீனமாக உள்ளதால் கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் இந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றன. பாலம் இடிந்து விபத்து ஏற்டும் ஆபத்தும் உள்ளது. தெய்வானை நகர் பகுதியில் உள்ள அனைத்து இடங்களுக்கும் நகராட்சி வரபைட அனுமதி வழங்கிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை