×

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆசிரியர், அரசு ஊழியர் மீதான நடவடிக்கை ரத்து?

சிவகங்கை, மார்ச். 10: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கடந்த ஆண்டு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் 5லட்சம் ஆசிரியர்கள் உட்பட 12லட்சம் பேர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் 2019 ஜன.24முதல் தினமும் ஏராளமான ஆசிரியர், அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இறுதியில் ஜன.30ஆம் தேதி கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே போராட்டம் முடிவுக்கு வந்தது.

தற்போது ஓராண்டுக்கு மேல் ஆகியும் போராடியவர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படாமல் உள்ள. ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் வருமென ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியவர்களில் தமிழகம் முழுவதும் 7ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மீது 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல்கள் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவையெல்லாம் ஓராண்டுக்கு மேலாகியும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பணி நிறைவு மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஏற்கனவே முந்தைய ஆட்சிகளில் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் சில மாதங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுதான் ஓராண்டிற்கு மேலாகியும் ரத்து செய்யப்படாமல் உள்ளன. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றார்.

Tags : teacher ,servant ,budget session ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...