×

விசைத்தறி தொழிலாளருக்கான போனஸ் குறைப்பு பேச்சுவார்த்தையை உரிமையாளர்கள் மீண்டும் புறக்கணிப்பு

பள்ளிபாளையம், மார்ச் 6: விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் குறைப்பு குறித்து, சேலம் தொழிலாளர் நல உதவி ஆணையர்  தலைமையில் நடைபெற இருந்த 10வது பேச்சுவார்த்தையையும், ஜவுளி உற்பத்தியாளர்கள் புறக்கணித்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, போனஸ் சதவீதம் முடிவு செய்யப்படும். கடந்த 2019ம் ஆண்டுக்கான பேச்சுவார்த்தையில், 9 சதவீதம் போனஸ் வழங்கப்படுமென ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர். ஆனால், 2018 ஆண்டை விட இது 0.5 சதவீதம் குறைவாக இருந்ததால், தொழிற்சங்கம் ஏற்கவில்லை. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 9.5 சதவீதம் போனசை வழங்க வேண்டுமென கேட்டனர். ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் இதை ஏற்கவில்லை. இதையடுத்து சேலம் தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, இருதரப்பினருக்கும் சேலம் தொழிலாளர் நல உதவி ஆணையர் சங்கீதா சம்மன் அனுப்பினார். கடந்த தீபாவளிக்கு பிறகு 6 முறை வாய்தா வழங்கப்பட்டும், ஜவுளி உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தைக்கு ஆஜராகவில்லை. வேறு வழியின்றி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து 7வது முறை பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். சங்க நிர்வாகிகளை கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாக தெரிவித்தனர். அதன் பின்னர் நடைபெற்ற 2 பேச்சுவார்த்தைகளிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். நேற்று நடைபெற்று 10வது வாய்தாவிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 7ம்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் பங்கேற்க வேண்டுமென தொழிலாளர் நல உதவி ஆணையர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர் நல உதவி ஆணையர் அறிவிக்கும் தேதியை தொடர்ந்து ஜவுளி உற்பத்தியாளர்கள் புறக்கணித்து வருவதால், மாவட்ட விசைத்தறி தொழிற்சங்க நிர்வாக குழு கூட்டத்தை நடத்தி, அடுத்த கட்ட அனுகுமுறை குறித்து விவாதித்து முடிவுவெடுக்கப்படுமென தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Tags : Owners ,negotiation ,power worker ,
× RELATED ரத்னம் படத்திற்கு தியேட்டர்...