×

ராஜபாளையத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம்

ராஜபாளையம், மார்ச் 6: ராஜபாளையம் நகராட்சியின் 19 வார்டுக்கு உட்பட்ட டி.பி. மில்ஸ் சாலையின் கிழக்கு பகுதியில், கடைகளுடன் கூடிய சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை நகராட்சியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 10 மணி அளவில் வந்த தண்ணீரில் துர் நாற்றம் வீசியுள்ளது. மேலும் குடிநீரில் சாக்கடை நீரும் கலந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், உடனடியாக நகராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி உள்ளனர். ஆனால், 7 நாட்களாகியும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை, அதிகாரிகள் சரி செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கண்ணன் கூறுகையில்,`` கடந்த ஒரு மாத காலமாக டி.பி. மில்ஸ் சாலையில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக குழி தோண்டும் போது, நகராட்சி அதிகாரிகளுடன் இருந்து, ஏற்கெனவே பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் சேதமாகாத வகையில் மேற்பார்வை செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி செய்யாத காரணத்தால், புதிய குழாய் பதிக்க பள்ளம் தோண்டும், ஊழியர்கள் குடிநீர் செல்லும் குழாய்களை அடிக்கடி உடைத்து விடுகின்றனர்.

மேலும் சாலையோரம் பள்ளம் தோண்டும் போது, வாறுகாலில் உள்ள சாக்கடை நீர் பள்ளத்தில் தேங்கி குடிநீருடன் கலந்து விடுகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும், குடிநீர் குழாய் உடைபட்ட இடத்தை சரி செய்ய இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. துர்நாற்றத்துடன் கூடிய இந்த தண்ணீரை நாங்கள் குடித்தால், பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் யாரும் கடந்த ஒரு வாரமாக தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். எனவே, நகராட்சி அதிகாரிகள் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யவும், மேலும் இது போன்று உடைப்பு ஏற்படாத வகையில், குழாய் பதிக்கும் ஊழியர்களுடன் இணைந்து செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ல் கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!