×

போக்குவரத்துக்கு இடையூறு ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

சிதம்பரம், மார்ச் 6: சிதம்பரம் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் போலீசார் அதிரடியாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சிதம்பரம் நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு ஏராளமான வெளியூர் பஸ்கள் மற்றும் உள்ளூர் பஸ்கள் தினமும் வந்து செல்கிறது. சுற்றுலா மற்றும் ஆன்மிக நகராக இருப்பதால் தினசரி சிதம்பரத்திற்கு வரும் பயணிகள் ஏராளம்.

இந்நிலையில், பஸ் நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. மேலும் பஸ் நிலையத்தை சுற்றிலும், பஸ் நிலையத்திற்கு உள்ளே செல்லும் சாலை, வெளியே வரும் சாலை என அனைத்து இடங்களும் ஆக்கிரமிப்புகளால் திணறி வந்தது.
இதனால் பேருந்து நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் சிரமமாக இருந்தது. மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார், நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பஸ் நிலைய நுழைவு வாயிலில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரத்தில் இருந்த பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்டவற்றை போலீசார் அதிரடியாக அகற்றினர்.இதுபோல் பஸ் நிலையம், கீழத்தெரு மாரியம்மன் கோயில், காந்தி சிலை உள்ளிட்ட இடங்களில் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கண்ட இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என ஆட்டோ டிரைவர்களை எச்சரித்தனர்.

இதேபோல் சாலை ஓரங்களில் தள்ளுவண்டியில் வைத்து பொருட்களை விற்பனை செய்யும் கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து போலீசார் தள்ளுவண்டிகளை நகராட்சி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர். சிதம்பரம் நகர போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போக்குவரத்து நெரிசலின்றி காணப்பட்டது.

Tags :
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுப்பு