×

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

மேலூர், மார்ச் 6: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக ஜனநாயக மேடை சார்பில் மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுகூட்டம் நடைபெற்றது. மேலூர் ஜமாஅத் தலைவர் சேக்தாவூது தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேலூர் தாலுகா செயலாளர் மெய்யர், மேலூர் நகர் திமுக செயலாளர் முகமது யாசின், அருள் தந்தை பால்மைக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் சிறப்புரையாற்றினார்.

பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளன. தமிழகத்திலும் அது போல் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இச்சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என முதல்வர் திரும்ப திரும்ப சொல்கிறார். அவர் இரட்டை நிலையை கையில் எடுத்தால் வெற்றி பெற முடியாது. சீப்பை ஒழித்து வைத்து திருமணம் நின்று விடும் என எண்ணுவது போல், போராட்டத்தை தடை செய்வது, அச்சுறுத்துவது மூலமாக இந்த பிரச்சனையை தடுத்து நிறுத்த முடியாது. குடியுரிமை திருத்த சட்டத்ததை திரும்ப பெறாவிடில் போராட்டம் தொடரும். இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வருவேன் என்று கூறிய ரஜினிகாந்த் எப்போது வருவார் என தெரியவில்லை. டெல்லியில் 47 பேர் கொல்லப்பட்டதற்கு இந்துத்துவா அமைப்பே காரணம். ஆனால் அதை திசை திருப்பும் வகையில் கொரோனா வைரஸ் பிரச்சனையை கையில் எடுத்திருப்பது தான் உண்மை’’ என்றார்.

Tags : Mutharasan ,Tamil Nadu ,
× RELATED ஹிட்லரை பின்பற்றும் பிரதமர் மோடி: இரா.முத்தரசன் தாக்கு