×

கோடை வெயிலில் கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ மதுரையில் பசுமை நிழற்பந்தல் முக்கிய சந்திப்புகளில் மாநகராட்சி ஏற்பாடு

 

மதுரை, மே 5: கோடை வெயிலில் இருந்து வாகன ஓட்டிகள் கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ செய்யும் விதமாக, மதுரையில் மாநகராட்சி சார்பில் முக்கிய சந்திப்புகளில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கடந்த ஒரு வாரமாக வெப்பக்காற்று வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று முதல் கத்திரி வெயில் துவங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்கும் நிலை காணப்படுகிறது. மேலும் குளர்ச்சி தரும் வெள்ளரி, தர்பூசணி, இளநீர், நுங்கு போன்வற்றை சாப்பிட்டு அவர்கள் தங்கள் தாகத்தை தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தஙகளை பாதுகாத்து கொள்ள பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களில் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து காத்திருக்கும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கும் வகையில் மதுரை மாநகராட்சியின் சார்பில் மதுரை மாநகரில் உள்ள முக்கிய சிக்னல் சந்திப்புகளில் பசுமை நிழற்பந்தல் அமைக்க கமிஷனர் தினேஷ்குமார் திட்டமிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சியின் வடக்கு வெளிவீதி சேதுபதி மேல்நிலைப்பள்ளி சந்திப்பு பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும் அவர்கள் சிறிது நேரம் ‘ரிலாக்ஸ்’ ஆவதற்காகவும் மாநகராட்சி சார்பில் பசுமை நிழற்பந்தல் நேற்று அமைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியின் சார்பில் அடுத்ததாக அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பு, காமராஜர் சாலை கணேஷ் தியேட்டர் சந்திப்பு, விளக்குத்தூண் கீழமாரட் வீதி சந்திப்பு ஆகிய பகுதிகளில் நிழற்பந்தல்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post கோடை வெயிலில் கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ மதுரையில் பசுமை நிழற்பந்தல் முக்கிய சந்திப்புகளில் மாநகராட்சி ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...