×

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவதை கண்டித்து 9ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம்

ஊட்டி, மார்ச். 6:  நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்கு வர கூடிய சுற்றுலா பயணிகளை வாடகை வாகனங்கள் மூலம் சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலர் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட பைக், நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். இதனால் சுற்றுலா
வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனியார் கால்டேக்சிகள் பேக்கேஜ் என்ற முறையில் சுற்றுலா பயணிகளை சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்கின்றன. இதனால் உள்ளூரில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போதிய வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் தனியார் நிறுவன கால்டேக்சிகள் பேக்கேஜ் முறையில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதை கட்டுபடுத்த வேண்டும். சொந்த உபயோக வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டோரிடம் பல முறை மனுக்கள் அளித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட
வில்லை.  இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி மாவட்டம் தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து சுற்றுலா வாகனங்களிலும் நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுலா கார், சுமோ, மேக்சி கேப் ஓட்டுநர் நலச் சங்க தலைவர் கோவர்த்தன் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட பைக், கார் போன்ற வாகனங்களை பலர் வாடகைக்கு விடுகின்றனர். இதேபோல் சமவெளி பகுதிகளை சேர்ந்த ஓலா, உபர் போன்ற கால் டேக்சிகள் சுற்றுலா பயணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் அழைத்து ெசல்கின்றனர். இதனால் உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.  இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி வரும் 9ம் தேதி மாவட்டம் தழுவிய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியம் ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது. எனவே இதில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

Tags : strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து