×

சாத்தியம்-மன்னம்பாடி சாலையில் முறிந்து விழுந்துள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்

விருத்தாசலம், மார்ச் 5: விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மன்னம்பாடியிலிருந்து சாத்தியம் வழியாக வேப்பூர்-விருத்தாசலம் நெடுஞ்சாலையை சென்றடைவதற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் தார்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். மேலும் சாத்தியத்தில் இருந்து கீரம்பூர் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையாக இந்த சாலை அமைந்துள்ளது. அதுபோல் சாத்தியம், கீரம்பூர், மன்னம்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய விளை நிலங்களுக்கு விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்வதற்கும் அறுவடை செய்த பொருட்களை வெளியே கொண்டு வருவதற்கும் இந்த பிரதான சாலையை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாலையின் அருகில் இருந்த பழமையான புளியமரம் ஒன்று கடந்த மூன்று நாட்களுக்கு முன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. மேலும் அது மின்கம்பத்தில் விழுந்து மின் வயர்கள் அறுந்து சேதமடைந்துள்ளதால் அப்பகுதிக்கு செல்லும் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருவதுடன் இந்த சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதனால் எந்தவித வாகனங்களும் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின் வாரியத்திடம்  தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சாத்தியம், கீரம்பூர், மன்னம்பாடி உள்ளிட்ட பகுதி மக்களின் நலன் கருதி முறிந்து விழுந்துள்ள மரத்தை அகற்றி அப்பகுதியில் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,road ,Possibility-Manampadi ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை