×

அரசு அலுவலகங்கள், வீடுகளில் மழைநீர் சேமிப்பு திட்டம் உயிர்ப்பெறுமா?

காரைக்குடி, மார்ச் 5: அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி பல இடங்களில் பயன்பாடு இல்லாமல் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மழை அளவு குறைந்ததால், வறட்சி ஏற்பட்டு நீர்மட்டம் குறைந்து வந்தது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கைகொடுத்த நிலையில், நெற்பயிரிட்டு விவசாயிகள் அமோக விளைச்சலை அடைந்தனர். தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக கடந்த காலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. இதனால் மழை காலங்களில் பெய்யும் மழைநீர் முழுவதும் நிலத்திற்குள் சென்று நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்தது.

இத்திட்டத்தில் காலப்போக்கில் அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தாததால் பொதுமக்களும் கவனம் செலுத்தவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழை தண்ணீர் அனைத்தும் வீணாக கடலுக்கு செல்கிறது. போதிய மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வரும் வேளையில் கிடைக்கும் நீரையும் வீணாக்கும் வகையில் உள்ளது.

ஆனால் தற்போது தெருக்களில் சிமெண்ட் சாலை போடப்பட்டதால் தண்ணீர் முழுவதும் கால்வாய்க்கு சென்று அதன் மூலம் கடலுக்கு செல்கிறது. குளம் மற்றும் கண்மாய்களுக்கும் வரத்து கால்வாய் இல்லாமல் வயல்காட்டு தண்ணீரும் கடலுக்கு செல்கிறது. வீணாகும் தண்ணீர் கடலுக்கு செல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் அனைத்து அரசு அலுவலகம் மற்றும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயமாக்கப்பட்ட போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

சில வருடங்களாக அதில் கவனம் செலுத்ததால் மழைநீர் அனைத்தும் வீணாக கடலில் கலக்கிறது. இப்போது எந்த அலுவலகத்திலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லை. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருள்கள் நிலத்தின் மேற்பரப்பில் கிடப்பதால் மழைநீர் உள்ளே செல்ல முடியாமல் விரைவில் ஆவியாகி விடுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அதனால் மீண்டும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பதில் கவனம் செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றனர்.

Tags : homes ,government offices ,
× RELATED வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள்...