×

கால்வாயில் விழுந்து காயமடையாத நாளில்லை கொடைரோடு அருகேதான் இந்த அவதி

வத்தலக்குண்டு, மார்ச் 5: கொடைரோடு அருகே காமலாபுரத்தில் பள்ளி முன்புள்ள கழிவுநீர் கால்வாயில் பலகைகள் அமைக்காததால் மாணவ, மாணவிகள் தவறி விழுவது தொடர்கதையாக உள்ளது. கொடைரோடு அருகே காமலாபுரத்தில் புனித அளப்ப கோயில் அடுத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயில் முன்பும், பள்ளி முன்பும் கழிவுநீர் செல்வதற்காக புதிய கால்வாய் அமைத்தனர். இந்த கால்வாய் மேல் சிமெண்ட் பலகைகள் போட வந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வந்ததால் அப்பணிகள் அப்படியே நின்று விட்டது. அதன்பின் இதுவரை கால்வாய் மீது பலகைகள் அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் மாணவ, மாணவிகள் அடிக்கடி கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். குறிப்பாக காலையில் பள்ளிக்கு தாமதமாக மற்றும் மாலையில் வீட்டிற்கு செல்லும் ஆவலில் ஓடும் மாணவ, மாணவிகள் கால்வாயில் விழுந்து காயமுறுவது தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாணவ, மாணவிகள் நலன் கருதி இனியும் தாமதிக்காமல் கால்வாயின் மீது சிமெண்ட் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர் பெனி்ட் கூறுகையில், ‘நூற்றாண்டுகள் கடந்த மிகவும் பழமையான அருளப்பர் தேவாலயத்திற்கு தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதில் முதியோர்களும் உண்டு. முதியோர்கள் கால்வாயை தாண்ட முடியாமல் அவதியடைகின்றனர். அதேபோல பள்ளி முன்பு, மாணவ, மாணவிகள் கால்வாயில் விழுந்து காயமடையாத நாளே இல்லை. எனவே போர்க்கால நடவடிக்கையாக கால்வாயை சிமிண்ட் பலகையால் மூட வேண்டும்’ என்றார்.

Tags : accident ,Kodairood ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...