×

சேரங்கோடு ஊராட்சியில் இலவச ஆடுகள் வழங்கும் பட்டியலில் குளறுபடி

பந்தலூர், மார்ச் 5:  பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியில் அரசின் விலையில்லா ஆடு வழங்கும் பயனாளிகள் பட்டியலில் குளறுபடி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.      பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி 49 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சியாகும். இப்பகுதியில் பெரும்பாலும் சிறு குறு விவசாயிகள், தோட்டத்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். சேரங்கோடு ஊராட்சியில் இந்த ஆண்டு 372 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு பட்டியல் தயார் செய்துள்ளனர். இந்த பயனாளிகள் பட்டியலில் குளறுபடி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இடைத்தரகர்கள் மூலம் பயனாளிகள் பட்டியல் தயார் செய்துள்ளதாகவும், இதில் விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நபர்களுக்கு இலவச ஆடுகள் வழங்காமல் வசதி படைத்தவர்களையும், ஏற்கனவே இலவச ஆடுகளை பெற்றவர்கள் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களையும் பயனாளிகளாக தேர்வு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இதனால் தகுதியான பயனாளிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.  இது குறித்து கூடலூர் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாசிடம் கேட்டபோது, முறையாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது, புகார் தெரிவிப்பவர்கள் ஆதாரத்துடன் தெரிவித்தால், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் இது பற்றி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனரும், மண்டல இணை இயக்குனர் பொறுப்பு டாக்டர் நீளவண்ணனிடம் கேட்டபோது, குழு மூலம் பயனாளிகள் தேர்வு நடைபெற்றுள்ளது. ஒரு ஊராட்சியில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. 20% மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ஆனால் சேரங்கோடு ஊராட்சியில் 70% எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பயனாளிகள் உள்ளனர். மிக பெரிய ஊராட்சி என்பதால், இது போன்ற பிரச்னை ஏற்படுகிறது என்றார். இப்பிரச்னைகளுக்கு இடையே 6ம் தேதி 60 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Serangood ,
× RELATED சேரங்கோடு ஊராட்சியில் குலுக்கல் முறையில் துணை தலைவர் தேர்வு