×

மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு விரிவாக்க எதிர்பார்ப்பு

கோவை, மார்ச் 5:கோவையில் மதுக்கரை-நீலம்பூர் பைபாஸ் ரோட்டை இரு மடங்கு விரிவாக்கம் செய்யவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். கோவையில் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் பணி 6 ஆண்டு காத்திருப்பிற்கு பின்னர் 168 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டது.  பஸ் வந்து செல்லும் பகுதி, இரு சக்கர வாகன நிறுத்தும், பஸ்கள் நிறுத்தப்படவுள்ள இடம், பூங்கா, ஆம்னி பஸ், டவுன்பஸ்கள் நிற்கும் பகுதி அமைக்கப்படவுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட் திட்டம் கோவை மாநகரின் கட்டமைப்பை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 140 பஸ்கள் நிறுத்தும் வகையிலான  ரேக்,  33 நகர டவுன்பஸ்கள் நிறுத்த பஸ் பே, 80 ஆம்னி பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்தும் இடம் போன்றவை அமைக்கப்படவுள்ளது. 71 கடைகள் கொண்ட வணிக வளாகமும் உருவாக்கப்படவுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட் மூலமாக தினமும் ஆயிரம் பஸ்கள் இயக்கப்படும். பஸ்கள் நிறுத்துவதற்காக மட்டும் 30 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிந்ததும் நகரில் உள்ள உக்கடம், சிங்காநல்லூர், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அனைத்தும் வெள்ளலூருக்கு மாற்றப்படும். இங்கேயிருந்து நகருக்கு பஸ்கள் இயக்கப்படும்.

மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு வழியாக திருச்சி ரோடு, அவினாசி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டிற்கு எளிதாக வாகனங்கள் சென்று வர முடியும்.  வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும்போது மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து பல மடங்கு அதிகமாகி விடும். தற்போதுள்ள 26.5 கி.மீ தூர பைபாஸ் ரோடு 2000ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த ரோட்டை இரு மடங்கு அகலமாக்க கடந்த 2011ம் ஆண்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. கிழக்கு பைபாஸ் ரோடு உருவாக்கும் முன் மதுக்கரை பைபாஸ் ரோடு விரிவாக்கும் பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு விரிவாக்கப்படவில்லை. கடந்த ஆண்டில், இந்த பைபாஸ் ரோட்டில் 250க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்வது அடிக்கடி நடக்கிறது. கனரக சரக்கு வாகனங்கள் செல்ல போதுமான ரோடு வசதியில்லை. ரோட்டை அகலப்படுத்தினால்தான் விபத்தை தவிர்க்க முடியும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ரோடு விரிவாக்க பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடக்கி வைத்துள்ளது. மேற்கு, கிழக்கு பைபாஸ், கரூர் கோவை பைபாஸ், வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் திட்டங்களுடன் மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் விரிவாக்க பணிகள் நடத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags :
× RELATED மோப்பிரிபாளையத்தில் ஆதார் அட்டை திருத்த முகாம்