×

பழிவாங்குவதற்காக மணியரசன் மீது வழக்கு

தஞ்சை, மார்ச் 4: பாபர் மசூதி தீர்ப்பை திறனாய்வு செய்த மணியரசன் மீதான வழக்கு கருத்துரிமையை பறித்து பழிவாங்குவதற்காகும் என்று தமிழ் தேசிய பேரியக்க பொது செயலாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திறனாய்வு செய்து கவிதை ஒன்றை முகநூலில் வெளியிட்டதற்காக தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் மீதும், அத்தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்ததற்காக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழக மக்கள் புரட்சி கழக பொது செயலாளர் அரங்க.குணசேகரன் ஆகியோர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலாகும்.உச்ச நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பு குறித்தும் எதிர் கருத்து கூறுவதோ, விவாதிப்பதோ, நீதிமன்ற அவமதிப்பு ஆகாது என்பதே சட்ட நெறிமுறையாகும்.நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சனம் செய்ய குடிமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் உரிமை இல்லாதுபோனால் ஆட்சியாளர்களின் கையடக்க நிறுவனமாக நீதிமன்றம் தாழ்ந்து விடும்.தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசனின் திறனாய்வு கவிதையோ, பழ.நெடுமாறன், அரங்க.குணசேகரன் ஆகியோரின் அறிக்கைகளோ எந்த சட்டத்திற்கும் முரணானது அல்ல என்பதை அவற்றை படித்து பார்க்கிற யாரும் புரிந்து கொள்ள முடியும். ஆயினும் இந்துத்துவா என்ற பெயரிலான தங்களது ஆரிய மேலாதிக்க கருத்துகளை தவிர வேறு எந்த கருத்துகளுக்கும் சட்ட வழிப்பட்ட உரிமை இல்லை என்பதை வன்முறை உள்ளிட்ட எல்லா வழிகளிலும் தெரிவித்து வரும் பாஜ அரசு- தம் சொல்படி நடக்கும் தமிழக அரசின் வழியாக இந்த வழக்கை தொடுத்துள்ளது. கருத்துரிமைக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரான இந்த வழக்கை தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டிக்கிறோம். மேலும் இவ்வழக்கை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Manirasan ,
× RELATED நாளை தஞ்சாவூரில் நான் முதல்வன் திட்ட...