×

வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் மின்னல் வேகத்தில் செல்லும் தனியார் தொழிற்சாலை பஸ்கள்

வாலாஜாபாத், மார்ச் 4: வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில், அதிவேகமாக செல்லும் தனியார் தொற்சாலை பஸ்களால் விபத்து அபாயம் உள்ளது. இதனை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாலாஜாபாத்தை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், ஒரகடம், பெரும்புதூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு பைக், பஸ், ரயில் மூலம் சென்று வருகின்றனர்.  மேலும், வாலாஜாபாத் அடுத்த சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான தனியார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து செய்யாறு, உத்திரமேரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பஸ்கள் மூலம் அழைத்து வந்து, கொண்டு செல்லப்படுகின்றனர்.

இதுபோல் செல்லும் தனியார் பஸ்கள் வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத் - ஒரகடம், சுங்குவார்சத்திரம் செல்லும் சாலைகளில் மின்னல் வேகத்தில் செல்கின்றன. இதனால், இந்த சாலைகளில் நடந்து செல்லும் மக்களும், பைக், கார், ஆட்டோக்களில் செல்பவர்களும் கடும் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இது தொடர்பாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், கண்டும் காணாமல் உள்ளனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் வரையும், வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம், சுங்குவார்சத்திரம் வரையும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு தினமும் தனியார் பஸ்கள் மூலம், வேலைக்கு வரும் ஊழியர்களை அழைத்துச் செல்கின்றனர்.
இதுபோல் அழைத்து செல்லும் பஸ்கள் அசுர வேகத்தில் செல்வதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமின்றி சாலையில் செல்லும் வாகனங்களை முந்தி செல்வதால், விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக தினமும் நடக்கும் விபத்துக்கள் குறித்து, தனியார் தொழிற்சாலைகளின் பஸ்கள் மீது வழக்குகள் பதிவு செய்வதில்லை. இதனை கட்டப் பஞ்சாயத்தில் முடிகின்றனர். இதனை தடுக்க மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆங்காங்கே அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு இதுபோன்று முந்தி செல்லும் தனியார் தொழிற்சாலை பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், விபத்துக்கள் குறையும் என்றனர்.

Tags : neighborhood ,Walajabad ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...