×

5 நாட்களுக்குள் வரி பாக்கி செலுத்தாத வீடுகளின் குடிநீர் துண்டிக்கப்படும்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

விருதுநகர், மார்ச் 4: விருதுநகர் நகராட்சிக்கு பல ஆண்டுகளாக வரி செலுத்தாத வீடுகளுக்கு ஆணையர் நேரில் சென்று வரி பாக்கியை செலுத்துமாறு வலியுறுத்தினார். 5 நாட்களுக்குள் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என எச்சரித்தார். விருதுநகர் நகராட்சியில் 25 ஆயிரம் வீடுகள், வணிக நிறுவனங்களின் வரியாக ஆண்டுக்கு ரூ.12 கோடி வரை வசூலாகி வந்தது. கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான வரி குறைப்பு நடவடிக்கையால் நகராட்சி வரி ரூ.8 கோடியாக குறைந்து விட்டது. இதனால் நகராட்சி ஊழியர்களுக்கு மாத ஊதியம் போட கூட வழியில்லாத நிலை உருவாகி உள்ளது. ஒவ்வொரு மாதமும் வரி வசூல் செய்தால் மட்டுமே ஊதியம், பென்சன் போட முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில் விருதுநகர் நகராட்சியில் 2 முதல் 10 ஆண்டுகள் வரை வரி செலுத்தாமலும், நீதிமன்ற வழக்குகள் நிறைவுற்ற பல வீடுகள் வரி செலுத்தாமல் ரூ.6 கோடி வரை வரி நிலுவை உள்ளது. நகராட்சி சார்பில் மைக், நோட்டீஸ் மூலம் அறிவுறுத்தல் வழங்கியும் குடியிருப்புவாசிகள் வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, வருவாய் அலுவலர் சங்கர் கணேஷ் தலைமையில் வரி ஆய்வாளர்கள், ஊழியர்கள் 4வது வார்டில் வேலுச்சாமி நகரில் வீடு, வீடாக சென்று நிலுவை வரியை செலுத்துமாறு அறிவுறுத்தினர். வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்தனர்.

ஆணையர் பார்த்தசாரதி கூறுகையில், நகரில் ரூ.6 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளனர். நீதிமன்ற வழக்கு முடித்த பலரும் வரியை செலுத்தாமல் இருக்கின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனம் நிலுவையாக வைத்திருந்த ரூ.60 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மின்வாரியத்திற்கு ரூ.1 கோடி மின்கட்டண நிலுவை உள்ளது. மின்கட்டணம் மற்றும் ஊழியர்கள் ஊதியம் வழங்க வரி வசூல் செய்தாக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. வரியை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்போர் 5 நாட்களுக்குள் வரி செலுத்தாவிடில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றார்.

Tags : households ,commissioner ,
× RELATED நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை,...