×

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள் வத்திராயிருப்பு விவசாயிகள் கவலை

வத்திராயிருப்பு, மார்ச் 4: மேற்கு தொடர்ச்சி மலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால்   வனவிலங்குகள் தோட்டங்களில் இறங்கி மா, தென்னை, பலா உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகிறது. இதனால் வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வத்திராயிருப்பு பகுதியைச் சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இதில் கான்சாபுரம் அத்திகோயில் மலையடிவாரப் பகுதியில் மா, தென்னை, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. அத்துடன் தாணிப்பாறை மலையடிவார பகுதிகளில் இதேபோன்று விவசாயம் நடைபெறுகிறது.

மலையடிவார தோட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யவில்லை. இதனால் தண்ணீர் தேடிவரும் யானை மாமரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து வனத்துறையினரிடம் விவசாயிகள் புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யானை மட்டுமின்றி காட்டெருமை போன்ற வனவிலங்குகளை விரட்ட வனத்துறை கொடுக்கும் பட்டாசு போதுமானதாக இல்லையென விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல நேரங்களில் பட்டாசுகளை தாங்களே வாங்கி வெடித்து பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து காத்து வருவதாகவும் கூறினர்.
அத்துன் இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து விடும் யானை, மாமரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் மலையடிவாரங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ``மலையடிவாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு வனவிலங்குகள் ஏற்படக்கூடிய விளைவுகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதோடு இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். அத்திகோயில், தாணிப்பாறை பகுதி உள்ளிட்ட இடங்களில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தால்தான் விவசாயிகள் மனவேதனையிலிருந்து தப்பிக்க முடியும்.

ஏனென்றால் தற்போதுள்ள நிலையில் இருக்கின்ற தண்ணீரை பாய்ச்சி விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். வத்திராயிருப்பு பகுதியைப் பொறுத்தவரை விவசாயத்தைத் தவிர வேறு தொழில் இல்லை. எனவே, இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயத்தை காப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

Tags : Wildlife farmers ,Western Ghats ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...