×

இருப்பு பருத்தி மொத்த கொள்முதலுக்கு சலுகை இந்திய பருத்தி கழக அறிவிப்புக்கு சைமா வரவேற்பு

கோவை, மார்ச் 4:  இந்திய பருத்தி கழகத்தின்  இருப்பில் உள்ள பருத்தியை மொத்தமாக கொள்முதல் செய்பவர்களுக்கு   சலுகை வழங்கும் அறிவிப்பை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது. இது குறித்து சைமா அமைப்பின் தலைவர் அஷ்வின் சந்திரன் கூறியதாவது: இந்திய  பருத்தி கழகம் கடந்த 2018-19 பருத்தி சீசனில் விவசாயிகளிடம் இருந்து  கொள்முதல் செய்த பருத்தியில் சுமார் 9 லட்சம் பேல்களை இருப்பு வைத்துள்ளது.  கடந்த சீசனில் விலை குறைந்ததால் பருத்தியை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போதைய சீசனிலும் 60 லட்சம் பேல்களுக்கும் அதிகமான  பருத்தியை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பு  அதிகமானதால் இரண்டு முறை கொள்முதல் செய்த பருத்திக்கும் சராசரி விலையை  நிர்ணயம் செய்து விற்பனை செய்ய முடிவு செய்தது. ஆனால் அந்த விலை சந்தை  விலையைக் காட்டிலும் அதிகம் என்பதால் பொதுத்துறை பஞ்சாலைகளைத் தவிர வேறு  யாரும் பருத்தியை வாங்க முன்வரவில்லை. இதையடுத்து இருப்பு வைத்துள்ள பருத்தியை  சந்தை விலைக்கு விற்று, பருத்தி சந்தையில் சமநிலையை உருவாக்க வேண்டும்  என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், குறைந்தபட்சம் 500 பேல்கள் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் பேல்கள்  வரை பருத்தியை வாங்குபவர்களுக்கு சலுகை அளிக்க இருப்பதாக பருத்தி கழகம்  தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கண்டிக்கு (356 கிலோ) ரூ.3,200 முதல்  ரூ.4,400 வரை தள்ளுபடி கிடைக்கும்.  சந்தையில் ரூ.40,500க்கு பருத்தி பஞ்சு கிடைத்தாலும், பருத்தி கழகத்தின்  பஞ்சுக்கான விலை ரூ.46,500 ஆகவே நீடிக்கும். இருப்பினும்,  இருப்பு வைத்து எடுத்துக் கொள்ளும் வசதி, பருத்தியின் தரம் போன்றவற்றைக்  கருத்தில் கொள்ளும்போது இந்த பருத்தியின் விலை சந்தை விலைக்கு அருகில்  வரும் என்பதால் பஞ்சாலைகள் தங்களுக்கான பருத்தியை பருத்தி கழகத்திடம்  இருந்து கொள்முதல் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக மத்திய  ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த நடவடிக்கையால் பருத்தி விலையில் நிலைத்தன்மை ஏற்படும் சூழல்  உருவாகியுள்ளது. இவ்வாறு அஷ்வின் சந்திரன் கூறினார்.

Tags : Sima ,announcement ,Indian Cotton Association ,
× RELATED மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு