×

குறிஞ்சிப்பாடி கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வேண்டும்

நெய்வேலி, மார்ச் 4: குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் வசிக்கும்  பொதுமக்கள், சுற்றியுள்ள கிராமங்களான சேராக்குப்பம், ஆபத்தானபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கால்நடை மருத்துவமனையில் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக நிரந்தர கால்நடை மருத்துவர் இல்லாததால் அங்கு பணிபுரியும் முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சிகிச்சை அளித்து வருகிறார்.

இங்கு நாள்தோறும் சுமார் 30க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள், கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை பொதுமக்கள் சிகிச்சைக்காக அழைத்து வரும்போது மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை மற்றும் மருந்துகள் அளிப்பதில் பல்வேறு இடையூறுகள் உள்ளது. மேலும் குறிஞ்சிப்பாடி கால்நடை மருத்துவமனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே திறந்துகிடப்பதால் கால்நடைகளை சிகிச்சைக்காக பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து   அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் இல்லாததால் மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்கள் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே குறிஞ்சிப்பாடியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்களை உடனடியாக நியமிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : Doctors ,Kurinjipadi Veterinary Hospital ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...